சிறுவயதில் அடித்து வளர்க்கப்பட்டவர்கள் தங்கள் பிள்ளைகளையும் அடித்து வளர்க்கும் சாத்தியம் இருப்பதாக உள்ளூர் ஆய்வு தெரிவித்துள்ளது.
சிறு பிள்ளைகளாக இருக்கும்போது அடிவாங்காதவர்களுடன் ஒப்பிடுகையில், அடித்து வளர்க்கப்பட்டவர்கள் தங்கள் பிள்ளைகளைத் தண்டிக்க அவர்களை அடிக்கும் சாத்தியம் அதிகம் எனக் கூறப்படுகிறது.
பிள்ளைகளுக்குத் தண்டனை கொடுக்க அவர்களை அடித்து வளர்க்கும் முறை தலைமுறை தலைமுறையாக நீடிக்கிறது என்பதை கண்டுபிடிக்க ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வுக்கு நன்யாங் தொழில்நுட்பப் பலகலைக்கழகத்தைச் சேர்ந்த உளவியல் துறை இணைப் பேராசிரியர் சீத்தோ பெய் பெய் தலைமை தாங்கினார்.
சிங்கப்பூரில் பிள்ளைகளை அடித்து வளர்க்கும் முறையை இக்காலத்திலும் பலர் கையாள்வதாகத் தெரிவிக்கப்பட்டது.
சிறு பிள்ளையாக இருந்தபோது குறைந்தது ஒருமுறையாவது பெற்றோர் தங்களை அடித்ததாக ஆய்வில் பங்கெடுத்தோரில் 88 விழுக்காட்டினர் தெரிவித்தனர்.
தங்கள் வீட்டில் பிரம்பு இருந்ததாக 79 விழுக்காட்டினர் கூறினர். பிரம்புகளாலும் பெற்றோரின் கைகளாலும் பலர் அடிவாங்கினர்.
ஆய்வில் ஏறத்தாழ 450 உள்ளூர் பட்டக் கல்வி மாணவர்கள் பங்கெடுத்தனர். அவர்கள் 18 வயதுக்கும் 29 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.
மிகக் கடுமையாகத் தண்டிக்கப்பட்ட பிள்ளைகள் மூர்க்கத்தனமாக நடந்துகொள்ளும் சாத்தியம் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. அவர்களது மனநலம் பாதிக்கப்படக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
கடுமையான தண்டனைகளின் விளைவாகப் பெற்றோர்-பிள்ளை உறவில் விரிசல் ஏற்படக்கூடும் என்றார் இணைப் பேராசிரியர் சீத்தோ.
ஆய்வின் கண்டுபிடிப்புகள் ஜூன் 3ல் அக்டா சைக்கோலனிக்கா சஞ்சிகையிலும் மார்ச் 7ல் சிறார் பாதுகாப்பு மற்றும் பயிற்சி சஞ்சிகையிலும் பிரசுரிக்கப்பட்டன.
அடித்துத் துன்புறுத்தப்பட்ட சிறுவர்களில் 63 விழுக்காட்டினருக்குக் கண்களுக்குத் தெரியும் ஒரு காயம் ஏற்பட்டதாக ஆய்வின் மூலம் தெரியவந்தது. அவர்களில் பலருக்குத் தோல் செந்நிறமாக மாறுவது, வடுக்கள், காயங்கள் ஆகியவை ஏற்பட்டன.
தங்களைத் தண்டிக்கும்போது பெற்றோரால் தங்களது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்று ஆய்வில் பங்கெடுத்த இளையர்களில் 89 விழுக்காட்டினர் நினைவுகூர்ந்தனர்.
தங்களை அடித்த பிறகு பெற்றோருக்குக் குற்ற உணர்வு ஏற்பட்டதாக ஏறத்தாழ 80 விழுக்காட்டினர் கூறினர்.
அடித்துத் துன்புறுத்தப்பட்டபோது தாங்க முடியாத வலியால் அவதிப்பட்டதாக 54 விழுக்காட்டினர் தெரிவித்தனர்.