தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மரித்தாலும் நம்பிக்கையால் புத்துயிருடன் எழலாம்

2 mins read
0a96706a-c2fd-4ceb-b090-5e231b2d1fa5
2024 ஜூன் மாதத்தில் வத்திகன் நகரில் போப் பிரான்சிசுடன் பசில் கண்ணங்கற (இடது). - படம்: பசில் கண்ணங்கற

ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமையன்று தேவாலயத்துக்குச் சென்று கொண்டாடியவர்களுள் ஒருவர் பசில் கண்ணங்கற.

இயேசு கிறிஸ்து புனித வெள்ளியன்று சிலுவையில் உயிரிழந்தபின் மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்த நாளை கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் பண்டிகையாகக் கொண்டாடுகின்றனர்.

வியாழன் மாலை தொடங்கி புனித வெள்ளியை அடுத்து புனித சனி, உயிர்ப்பு ஞாயிறு ஆகிய மூன்று நாள்கள் கிறிஸ்தவர்களுக்கு முக்கியமானவை. அதில் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 18) அவர்கள் திருவிழிப்பு என்று அழைக்கப்படும் நாளில் இயேசு கிறிஸ்து சிலுவையில் அறைப்படும்வரை பட்ட பாடுகளைத் தியானிப்பர்.

“தம்மைப் பின்பற்றிய நெருங்கிய சீடர் ஒருவரால் இயேசு கிறிஸ்து காட்டிக்கொடுக்கப்படுவார். பல கொடுமைகளுக்கு ஆளாகி பின் சிலுவையில் அறையப்பட்டார். அதையடுத்து அவரது சீடர்கள் பயத்துடனும் குழப்பத்துடனும் இருந்தனர்,” என்று பகிர்ந்துகொண்டார் திரு பசில்.

புனித வெள்ளிக்கு முந்தைய மாலைப் பொழுதில் திரு பசிலைப் போன்ற கிறிஸ்துவர்கள் பலர் வாட்டர்லூ ஸ்ட்ரீட் பகுதியில் உள்ள தேவாலயங்களுக்குத் சக சபை அங்கத்தினருடன் யாத்திரை மேற்கொண்டனர்.

“நூற்றுக்கணக்கான கிறிஸ்துவர்களுடன் பல்வேறு தேவாலயங்களுக்கு நடந்துசென்று இயேசு கிறிஸ்து வாழ்ந்த கடைசி சில மணி நேரத்தைப் பற்றிச் சிந்திப்பது வழமை. மெய்சிலிர்க்கவைக்கும் ஆன்மிக அனுபவமாக இருந்தது,” என்றார் திரு பசில்.

ஈஸ்டர் ஞாயிறன்று உற்றாரும் உறவினருடன் தேவாலய வழிபாடில் ஈடுபடுவது இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல்மீது கிறிஸ்துவர்களின் கவனத்தைச் செலுத்த உதவுவதாகவும் திரு பசில் கூறினார்.

40 வயது மதிக்கத்தக்க திரு பசில், ‘ பியிங் பிரிட்ஜஸ்’ என்ற சமூக வர்த்தகத்தை நடத்திவருகிறார். அதன்வழி சமய நல்லிணக்கத்தை வளர்க்க அவர் துணைபுரிகிறார்.

இந்த ஈஸ்டர் காலத்தில் அத்தகைய நல்லிணக்கத்தை இன்னும் பேண திரு பசில் விரும்புகிறார்.

சிங்கள தந்தைக்கும் பெரனக்கான் தாய்க்கும் பிறந்த திரு பசில், மெய்யியல், மானுடவியல் ஆகியவற்றில் இளநிலைப் பட்டக்கல்வி மேற்கொண்டுள்ளதோடு கிறிஸ்துவ சமயவியலிலும் சமய நல்லிணக்கக் கலந்துரையாடலிலும் இரண்டு முதுநிலைச் சான்றிதழ்களைப் பெற்றுள்ளார்.

போப் ஃபிரான்சிஸ், கடந்த ஆண்டு செப்டம்பரில் சிங்கப்பூருக்கு வந்தபோது சிங்கப்பூரின் நல்லிணக்கப் பிரதிநிதியாகத் திரு பசில் செயல்பட்டார்.

“போப் ஃபிரான்சிசைப் பார்த்தது விவரிக்க முடியாத மகிழ்ச்சி,” என்று பெருமிதம்கொண்டார் திரு பசில்

“போப்பைச் சந்தித்தபோது நான் பட்ட துயர்களுக்கும் சந்தித்த சவால்களுக்கு அர்த்தம் இருந்தது போல உணர்ந்தேன். அது எனக்கு ஒருவித உயிர்த்தெழுதல்தான்,” என்ற திரு பசில், இவ்வாண்டின் ஈஸ்டர் திருநாள் தமக்கு இன்னும் அர்த்தமுள்ள நாளாகத் திகழ்வதாகக் கூறினார்.

வாழ்க்கையில் எத்தகைய சவால்கள் சூழ்ந்தாலும் நம்பிக்கை என்றும் உள்ளது என்றும் சில நேரங்களில் சாத்தியம் இல்லாததும் சாத்தியமாகும் என்றும் இத்திருநாளிலிருந்து கற்பதாகத் திரு பசில் கூறினார்.

குறிப்புச் சொற்கள்