தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இன்டர்போல்: வேலை ஆசை காட்டி ஆட்கடத்தல்

1 mins read
225dcec5-ec33-45cd-ac69-4726c876fa3d
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

மோசடிக் கும்பல்கள் பேரளவு ஆட்கடத்தலில் ஈடுபட்டுள்ளதாகவும் போலி வேலை வாய்ப்புகள் மூலம் தென்கிழக்காசியாவில் ஆயிரக்கணக்கானோரைத் தங்கள் வலையில் சிக்கவைத்து, குற்றச் செயல்களில் ஈடுபடுத்துவதாகவும் அனைத்துலகக் காவல்துறை அமைப்பான இன்டர்போல் தெரிவித்துள்ளது.

இது உலகளவில் கடுமையான, பொதுப் பாதுகாப்பிற்கு உடனடி அச்சுறுத்தல் எனக் குறிப்பிட்டு, இன்டர்போல் தனது 195 உறுப்பு நாடுகளுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை அனுப்பியுள்ளது.

சமூக ஊடகங்கள், ஆட்சேர்ப்பு இணையத்தளங்கள் வாயிலாக, நல்ல சம்பளத்துடன் கூடிய வேலை எனப் பொய்யான உறுதியளித்து, அந்தக் குற்றக் கும்பல்கள் பல்லாயிரக்கணக்கானோரை ஈர்த்துள்ளதாகத் தனது எச்சரிக்கையில் இன்டர்போல் குறிப்பிட்டுள்ளது.

"பின்னர் அவர்களைக் கடத்தி, மோசமான இடங்களில் அடைத்து வைத்து, அடித்துத் துன்புறுத்துகின்றனர்; பாலியல் ரீதியாகவும் சீரழிக்கின்றனர். முதலீடு, காதல், மின்னிலக்க நாணய மோசடிகள், இணையச் சூதாட்டம் போன்ற குற்றச் செயல்களிலும் ஈடுபடுமாறும் அவர்கள் கட்டாயப்படுத்தப்படுகின்றனர்," என்று தெரிவிக்கப்பட்டது.

குறிப்பாக, கொவிட்-19 பரவலின்போது வேலையிழந்தோரைக் குறிவைத்து அக்கும்பல்கள் செயல்படுவதாக ஆட்கடத்தல், குடியேறிக் கடத்தலுக்கான இன்டர்போல் அமைப்பின் இடைக்கால ஒருங்கிணைப்பாளர் ஐசக் எஸ்பினோஸா கூறினார்.

இதனால், வேலை தருவதாகக் கூறுமிடத்தில் அந்த ஆட்சேர்ப்பு நிறுவனங்கள் செயல்படுகின்றனவா, அவர்களின் தொடர்பு எண்கள் போன்றவற்றின் உண்மைத்தன்மையைச் சரிபார்க்குமாறு திரு எஸ்பினோசா அறிவுறுத்தி இருக்கிறார்.

குறிப்புச் சொற்கள்