சிங்கப்பூரின் துறைமுக வளர்ச்சியால் 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சிங்கப்பூருக்கு வந்தவர்களில் அரபு வியாபாரிகளும் அடங்குவர்
கம்போங் கிளாமிலுள்ள அரபுத் தெருவைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஒருவரோடு ஒருவர் இணைந்து வர்த்தகம் செய்தனர்.
இந்த அரபு வியாபாரிகளில் பெரும்பாலானோர் அரேபிய தீபகற்பத்தின் தெற்கே உள்ள புவியியல் பகுதியான ஏமனில் உள்ள ஹத்ரமௌத் (Hadhramaut) பகுதியைச் சேர்ந்த ஹத்ரமி (Hadhrami) புலம்பெயர்ந்தோராவர்.
தொடக்கக்கால குடியேறிகளில் அல்சகோஃப் (Alsagoff) குடும்பத்தினர் குறிப்பிடத்தக்கவர்கள்.
1848ல் ‘அல்சகோஃப் அன்ட் கோ’ (Alsagoff & Co) நிறுவனத்தை நிறுவிய அந்த வர்த்தகர்கள் ஜவ்வரிசி, மசாலாப் பொருட்கள், தேங்காய், காபி, அன்னாசி, சுறாத் துடுப்புகள், புகையிலை, தேன், பேரீச்சம்பழம் ஆகிய பொருள்களுக்கான இறக்குமதி-ஏற்றுமதி வணிகத்தில் ஈடுபட்டு வந்தனர்.
பல ஆண்டுகளுக்குப் பிறகு குடும்பத்தின் செல்வமும் செல்வாக்கும் வளர்ந்து செழித்த நிலையில், அந்தக் குடும்பத்தினர் தங்களுக்காக தலைமை சமையல்காரரை வேலைக்கு அமர்த்தினர்.
பின்னாளில் அவர் 1921ல் புகழ்பெற்ற இஸ்லாமிக் உணவகத்தை நிறுவினார். அந்த நேரத்தில் பணியாளராக இருந்த எம். அப்துல் ரஹிமான், உணவின் மீதான தனது ஆர்வத்தை தொழில்முனைப்பு வழி தொடர்ந்தார்.
100 ஆண்டுகளுக்கும் மேலாக, அவரது பேரன் திரு. கலீல்நூர் வஹாப், தமது தாத்தா தமிழ்நாட்டில் இளையராக இருந்தபோது கற்றுக்கொண்ட செய்முறையின்படி உண்மையாகத் தயாரிக்கப்படும் பிரியாணியை இந்த உணவகம் இன்றும் வழங்குவதை உறுதிசெய்கிறார்.
தொடர்புடைய செய்திகள்
இந்தியர்களுடனும் பிற இனக்குழுக்களுடனான அரபு சமூகத்தின் உறவைப் பற்றிய இதேபோன்ற குறிப்புகள் ‘சிங்கப்பூரின் அரபுகள் 200 ஆண்டுகள்’ (Arabs of Singapore: 200 Years On) என்ற புத்தகத்தில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.
‘அரபு நெட்வொர்க் அட் சிங்கப்பூர்’ எனப்படும் சிங்கப்பூர் அரபுக் கட்டமைப்பு மூலம் வெளியிடப்பட்ட இந்தப் புத்தகம், நவம்பர் 2025ல் அதிபர் தர்மன் சண்முகரத்னம் சிறப்பித்த நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது.
இதைத் தொடர்ந்து மே 28 அன்று ‘Threads of Time’ என்ற கருப்பொருளில் ஒன்றுகூடும் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இதில் பண்பாட்டு, இலக்கிய, அரசாங்க மற்றும் வணிக சமூகங்களைச் சேர்ந்த 25 உறுப்பினர்கள் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
முன்னாள் சுற்றுச்சூழல் மற்றும் முஸ்லிம் விவகாரங்களுக்கான பொறுப்பு அமைச்சர் அகமது மாத்தாரும் கல்வி, தேசிய வளர்ச்சி ஆகிய அமைச்சுகளுக்கான மூத்த நாடாளுமன்றச் செயலாளர் சையத் ஹருன் அல்ஹப்ஷியும் இதில் கலந்துகொண்டனர்.
ஊத் (oud) இசை, சமோசாக்கள், இஞ்சி கோஃபி, பக்ஹூர் தூபத்தின் நறுமணம், த சம்ரா கிளப்பின் (The Samrah Club) நேரடி நடன நிகழ்ச்சிகள் எனப் புலன்கள் யாவிலும் சுவை நிரம்பிய அனுபவத்தில் விருந்தினர்கள் திளைத்தனர்.

