கையில் கத்தி: மூன்று அமெரிக்க சகோதரர்களுக்குத் தண்டனை

1 mins read
8c57b5d1-0fd0-4cab-a1c7-e4cdf80b218e
(இடமிருந்து) ஆல்பர்ட், 25, அலிஜான்ட்ரோ, 18, அலெக்ஸிஸ், 21. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஆர்ச்சர்ட் பிளாசா கடைத்தொகுதியில் தகராறு செய்தபோது கத்திகள் வைத்திருந்ததை மூன்று அமெரிக்க சகோதரர்கள் ஒப்புக்கொண்டனர். அதனைத் தொடர்ந்து வியாழக்கிழமை (டிசம்பர் 5) அவர்களுக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

ஆல்பர்ட், 25, அலெக்ஸிஸ், 21, அலிஜான்ட்ரோ, 18, ஆகிய அந்த மூவரும் விடுமுறையைக் கழிக்க கடந்த ஜூலை 26ஆம் தேதி சிங்கப்பூர் வந்ததாக அரசுத்தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் கூறினார்.

அன்றிரவு மதுபானக் கூடங்களுக்குச் சென்ற பின்னர், ஜூலை 27 அதிகாலை 5 மணியளவில் ஆர்ச்சர்ட் பிளாசா முதல் தளத்தில் உள்ள உணவகம் ஒன்றின் முதலாளியுடன் வாக்குவாதம் செய்தனர்.

பின்னர், பேரங்காடி ஒன்றில் மூன்று கத்திகளை வாங்கிக்கொண்டு அதே உணவகத்திற்கு காலை 9 மணியளவில் சென்று மீண்டும் தகராறு செய்தனர்.

அவர்களிடம் ஆயுதம் இருப்பது குறித்து காவல்துறையிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. அன்று பகல் 12 மணிக்குள் மூவரும் கைது செய்யப்பட்டனர்.

உயிருக்கு ஆபத்தான ஆயுதம் வைத்திருந்த குற்றத்திற்காக ஆல்பர்ட்டுக்கு ஆறு வாரச் சிறையும் அலெக்ஸிஸுக்கு நான்கு வாரச் சிறையும் அலிஜான்ட்ரோவுக்கு 14 நாள் குறுகிய தடுப்புக்காவலும் தண்டனையாக விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

மரணம் விளைவிக்கக்கூடிய ஆயுதத்தை வைத்திருக்கும் தனிப்பட்டோருக்கு ஈராண்டு வரையிலான சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்