போதைப்பொருள் கடத்திய சந்தேகத்தின் தொடர்பில் மூவர் கைது

போதைப்பொருள் கடத்திய சந்தேகத்தின் தொடர்பில் மூவர் கைது

2 mins read
e9116b95-c241-4a6f-9886-2358592656e6
பாசிர் ரிஸ் ஸ்திரீட் 11ன் அருகே திங்கட்கிழமை (ஜூலை 27) நடத்தப்பட்ட அதிரடிச் சோதனையில் கஞ்சா, கெட்டமின் உள்ளிட்ட போதைப்பொருள்கள் பிடிபட்டன. - படம்: மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு

போதைப்பொருள் கடத்திய சந்தேகத்தின்பேரில் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு $142,000 பெறுமான போதைப்பொருள்களைக் கைப்பற்றியது.

அதன் தொடர்பில் மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு புதன்கிழமை (ஜூலை 29) அறிக்கையொன்றை வெளியிட்டது.

கிட்டத்தட்ட 5.52 கிலோகிராம் கஞ்சா, 132 கிராம் மெத்தம்ஃபெட்டமின் அல்லது ஐஸ், 145 கிராம் கெட்டமின், நான்கு எல்எஸ்டி (LSD) முத்திரை பதித்த தாள்கள் முதலியவை பறிமுதல் செய்யப்பட்டதாகப் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு தெரிவித்தது. இவை 860 போதைப்பொருள் புழங்கிகளின் ஒரு வாரத் தேவையைப் பூர்த்திசெய்யப் போதுமானவை என்று கூறப்பட்டது.

பிடிபட்ட மூவரும் சிங்கப்பூரர்கள். அவர்களின் வயது 27, 29 மற்றும் 34. இருவர் போதைப்பொருள்களைக் கடத்தியவர்கள் என்றும் மற்றவர் போதைப்பொருள் புழங்கி என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

திங்கட்கிழமை (ஜூலை 27) பிற்பகலில், அங் மோ கியோ அவென்யூ 4 அருகிலுள்ள குடியிருப்பு புளோக்கின் கீழ்த்தளத்தில் போதைப்பொருள் கடத்தல் குற்றங்களில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் 34 வயது நபரை அதிகாரிகள் கைதுசெய்தனர்.

அடுத்த புளோக்கில் வசித்த வீட்டுக்கு அவர் அழைத்துச்செல்லப்பட்டார். அதிகாரிகள் அங்குத் தேடியதில், நான்கு எல்எஸ்டி முத்திரை பதித்த தாள்களும் 879 கிராம் கஞ்சாவும் கிட்டத்தட்ட 123 கிராம் ஐசும் கைப்பற்றப்பட்டன.

பின்னர் அதிகாரிகள் பாசிர் ரி‌ஸ் ஸ்திரீட் 11க்கு அருகே இரண்டாம் சோதனையை மேற்கொண்டனர். அதில், போதைப்பொருள்களைக் கடத்திய சந்தேகத்தின் தொடர்பில் 29 வயது ஆடவர் கைதானார்.

அந்த நபர் குடியிருந்த வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அதிகாரிகள் ஏறக்குறைய 4,641 கிராம் கஞ்சாவையும் 145 கிராம் கெட்டமினையும் பறிமுதல் செய்தனர்.

ஜூலை 27ஆம் தேதி பிற்பகலில் ஜாலான் புக்கிட் ஹோ சுவி அருகில் 27 வயது ஆடவர், அவர் குடியிருந்த வீட்டில் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 9 கிராம் ஐஸ் பிடிபட்டது.

ஒருவர் 500 கிராமுக்கும் மேற்பட்ட கஞ்சாவைக் கடத்திய குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படக்கூடும்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களின் போதைப்பொருள் நடவடிக்கைகள் குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெறுவதாக மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்போதைப்பொருள்ஒழிப்புகைதுஅதிகாரிவிசாரணைமரண தண்டனை