சிங்கப்பூர்ப் பங்குச் சந்தையில் முதலீடு செய்ய மூன்று சொத்து நிர்வாகிகளுக்கு $1.1 பில்லியன் தொகை ஒதுக்கப்படும் என்று சிங்கப்பூர் நாணய ஆணையம் (ஜூலை 21) தெரிவித்துள்ளது.
அவண்டா முதலீட்டு நிறுவனம் (Avanda Investment Management), ஃபுல்லர்டன் நிதி நிறுவனம், (Fullerton Fund Management), ஜெபி மோர்கன் சொத்து நிறுவனம் (JP Morgan Asset Management) ஆகியவற்றுக்கு அந்தத் தொகை வழங்கப்படும்.
நிதித் திட்டத்தின் இலக்குகளுக்கு ஏற்ப முன்வைக்கப்பட்ட நிதி உத்திகள், மூன்றாம் தரப்பு முதலீட்டை ஈர்ப்பதற்கான திட்டத்தின் பலம் ஆகியவற்றின் அடிப்படையில் மூன்று நிதி நிர்வாக நிறுவனங்களும் தேர்வு செய்யப்பட்டன.
சிங்கப்பூரின் சொத்து நிர்வாகம், ஆராய்ச்சித் திறன்கள் போன்றவற்றின் வளர்ச்சிக்குப் பங்களிக்க நிறுவனங்கள் உறுதியுடன் இருந்ததாலும் அவை தெரிவு செய்யப்பட்டதாக சிங்கப்பூர் நாணய ஆணையம் குறிப்பிட்டது.
ஆணையத் திட்டத்தின்கீழ்வரும் சொத்து நிர்வாக நிறுவனங்கள் அன்றாட முதலீட்டுக்கும் நிர்வாகத் தீர்மானங்களுக்கும் பொறுப்பு வகிக்கும். அவர்களின் முதலீட்டு செயல்பாடு குறித்து உத்தரவாதம் தர இயலாது என்று ஆணையம் குறிப்பிட்டது.
உள்ளூரைத் தவிர அனைத்துலக அளவிலும் வட்டார ரீதியிலும் நூற்றுக்கணக்கான சொத்து நிர்வாக நிறுவனங்கள் திட்டத்தில் இணைய விருப்பம் காட்டியதாக சிங்கப்பூர் நாணய ஆணையம் குறிப்பிட்டது. கூடுதல் சொத்து நிர்வாக நிறுவனங்களை நியமிக்க சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களைக் கட்டங்கட்டமாக ஆராய்வதாக அது கூறியது.
இவ்வாண்டின் நான்காம் காலாண்டுக்குள் அடுத்த தொகுதி நிதி நிர்வாக நிறுவனங்கள் குறித்து அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிங்கப்பூர் நாணய ஆணையத் துணைத் தலைவர் சீ ஹொங் டாட், “இந்தத் திட்டம் சிங்கப்பூர் சந்தையில் நிதியைச் செலுத்துவது பற்றி மட்டுமல்ல நிதி நிர்வாகத் துறையை வளர்க்கவும்தான்,” என்றார்.
தொடர்புடைய செய்திகள்
“இந்தச் சொத்து நிர்வாகிகள் தனியார் முதலீடுகளை ஈர்ப்பதன் மூலம் சிங்கப்பூர் பங்குச் சந்தைகளில் இன்னும் பெரிய அளவிலான பணப்புழக்கத்தைக் கொண்டுவர வேண்டும் என்று விரும்புகிறோம்,” என்றார் அவர்.
முதலீட்டாளர் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கான கூடுதல் விதிகளும் அறிமுகம் செய்யப்பட்டன.
“புதிய முதலீட்டாளர் உதவி வழிகள் குறித்த நாணய ஆணையத்தின் அறிவிப்பு சில்லறை முதலீட்டாளர்களுக்கு ஒரு நல்ல செய்தி. மூலதனச் சந்தைகளுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்,” என்று சிங்கப்பூர் பத்திர முதலீட்டாளர்கள் சங்கத்தின் தலைவர் திரு டேவிட் ஜெரால்ட் கூறினார்.