பொதுச் சொத்தைச் சேதப்படுத்தியதாக மூவர்மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

1 mins read
f3a549c0-fba7-4e33-bcc9-80e1a23697fa
சிங்கப்பூர் நீதிமன்றக் கட்டடம். - படம: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தங்களுக்கிடையே இருந்த வர்த்தகப் போட்டியால், தோ பாயோவில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக குடியிருப்புப் பேட்டையின் பல்வேறு பொது இடங்களில் ஒட்டப்பட்ட விளம்பரங்களை ஒருவருக்கொருவர் சேதப்படுத்தியபோது பொதுச் சொத்துகளும் பாதிப்படைந்ததால் மூவர் மீது நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 27) குற்றஞ்சாட்டப்பட்டது.

ஜூ டாட் சொங் 51, லீ சாய் கூன் 75, லீ வெய் கியாங் 38, ஆகிய அந்த மூன்று ஆடவர்கள்மீதும் பொதுச் சொத்தைச் சேதப்படுத்தியது, குறும்புச் செயல்களில் ஈடுபட்டது போன்ற பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

கடந்த 2025ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் அவர்கள் மூவரும் அவரவர் சேவைகளைப் பற்றி வீவக வீடுகளின் மின்தூக்கிகளிலும் மின்தூக்கித் தளங்களிலும் விளம்பரங்களை ஒட்டியுள்ளனர். பிறகு, தங்களுக்குப் போட்டியாக மற்றவர் ஒட்டிய விளம்பரங்களைச் சிறிய கையடக்கக் கத்திகளால் வெட்டியெடுத்துள்ளனர்.

அவர்களில் லீ சாய் கூன் என்பவர் ஜூன் மாதம் 28ஆம் தேதி அங் மோ கியோ ஸ்திரீட் 21, புளோக் 246ல் உள்ள வீவக கட்டடத்தின் அறிவிப்புப் பலகையில் கறுப்புச் சாயத்தைப் பீய்ச்சி அடித்துள்ளார். மேலும் பணியில் இருந்த பொதுச் சேவை அதிகாரியை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். அதற்காக அவர்மீது கூடுதல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தங்ளின் காவல்நிலையத்தைச் சேர்ந்த அதிகாரிகள் நடத்திய விசாரணையில் கண்காணிப்புக் கேமராக்கள் மூலம் குற்றவாளிகளின் அடையாளங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

குறிப்புச் சொற்கள்