பள்ளிவாசல் திட்டப்பணிக்குப் போலி விலை கூறிய விவகாரம்: மூவர் மீது குற்றச்சாட்டு

2 mins read
6d635ce4-57f0-430d-bf70-c89db91f733c
முகம்மது தாவுட் ஏ ரஹீம், 60. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 3

ஆலோசனைச் சேவை வழங்கும் நிறுவனம் ஒன்றின் இயக்குநரான முகம்மது தாவூட் ஏ ரஹீம், சுல்தான் பள்ளிவாசலின் மின்னிலக்கமய திட்டப்பணியை முடித்துத் தருவதற்குப் போலியான விலையைக் குறிப்பிட வேறு இரு நிறுவனங்களின் இயக்குநர்களைத் தூண்டியதாகக் கூறப்படுகிறது.

‘கிரோம் கன்சல்ட்டிங்’ நிறுவன இயக்குநராக இருந்த 60 வயது தாவூட், 2022 ஆகஸ்ட்டிற்கும் அக்டோபருக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் போலி விலையைக் குறிப்பிட முகம்மது நசிர் முகம்மது சைரியையும் முகம்மது நஸ்ரல் அவாங்கையும் தூண்டியதாகக் கூறப்படுகிறது.

நஸ்ரல், 44, ‘ஒனாகா சிஸ்’ இயக்குநராகவும் நசிர், 59, ‘ஃபத்தின் மல்டிமீடியா’ இயக்குநராகவும் அப்போது இருந்தனர்.

லஞ்ச, ஊழல் புலனாய்வுப் பிரிவு வெளியிட்ட அறிக்கையில், “பள்ளிவாசலுக்கு மின்னிலக்கமய திட்டத்தைக் குறிப்பிட்ட விலையில் முன்னெடுக்க ஃபத்தின் மல்டிமீடியாவும் ஒனாகா சிஸ்ஸும் தயாராக இருந்ததாக சுல்தான் பள்ளிவாசலை நம்பவைக்கும் விதத்தில் இந்தப் போலியான விலைகள் குறிப்பிடப்பட்டதாகக் கூறப்படுகிறது,” என்றது.

மின்னிலக்கமய திட்டத்துக்கு கிரோம் கன்சல்ட்டிங் குறிப்பிட்ட விலையே போட்டித்தன்மைமிக்கது என நம்பவைத்து சுல்தான் பள்ளிவாசலை ஏமாற்ற டாவுட் நோக்கம் கொண்டிருந்ததாகக் கூறப்படுவதாகவும் புலனாய்வுப் பிரிவு விவரித்தது.

இந்நிலையில், பொய்த் தகவல் கூற வேறொருவரைத் தூண்டியதாக டாவுட் மீது செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 31) இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

தெரிந்தே தாவூட்டுக்கு உதவியதாக நஸ்ரல், நசிர் இருவருக்கும் தலா ஒரு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

சுல்தான் பள்ளிவாசலை ஏமாற்றும் நோக்கில் அதன் மேலாளர் ஒருவரிடம் போலியான விலையைக் குறிப்பிட்டதாக, ஊழல் தடுப்புச் சட்டத்தின்கீழ் தாவூட் மீது மேலும் இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

குறிப்புச் சொற்கள்