கரிம வெளியேற்றத் தடுப்பு முறையை ஆராய மூன்று நிறுவனங்கள் தேர்வு

2 mins read
ff40c4a2-2cfc-467f-87af-c9f206982b46
மின்சாரத்துறையில் கரிம வெளியேற்றத்தைத் தடுக்கும் வகையில் வெளியேறும் கரியமில வாயுவைப் பிடித்து அடைத்து வைத்திருப்பதற்கான இரண்டு வழிமுறைகளை நிறுவனங்கள் ஆராயும். - படம்: சாவ்பாவ்

கரிம வெளியேற்றத்தைத் தடுக்கும் வகையில் வெளியேறும் கரியமில வாயுவைப் பிடித்து அடைத்து வைத்திருப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

இந்த ஆய்வை நடத்த மூன்று மின் உற்பத்தி நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

எதிர்காலத்தில், குறைந்த கரிம வெளியேற்ற நாடாக சிங்கப்பூர் திகழ இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

ஆய்வு நடத்த கெப்பல், பசிபிக்லைட் பவர், ஒய்டிஎல் பவர்செராயா ஆகிய நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன என்று எரிசக்தி சந்தை ஆணையம் நேற்று (ஜூலை 14) தெரிவித்தது.

ஆய்வுக்கான நிதியைப் பெற அந்நிறுவனங்கள் முன்வைத்துள்ள ஐந்து பரிந்துரைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

மின்சாரத்துறையில் கரிம வெளியேற்றத்தைத் தடுக்கும் வகையில் வெளியேறும் கரியமில வாயுவைப் பிடித்து அடைத்துவைத்திருப்பதற்கான இரண்டு வழிமுறைகளை நிறுவனங்கள் ஆராயும்.

இயற்கை எரிவாயு எரிக்கப்பட்ட பிறகு அதிலிருந்து வெளியேறும் கரியமில வாயுவைப் பிடித்து அடைத்துவைக்க ஆலையில் கருவியைப் பொருத்துவது ஒரு முறையாகும்.

இயற்கை எரிவாயுவிலிருந்து ஹைட்ரஜன் உற்பத்தி செய்யப்படும்போது அதிலிருந்து வெளியேறும் கரியமில வாயுவைப் பிடித்து அடைத்துவைப்பது இன்னொரு முறையாகும்.

இதன்மூலம், மின்சாரத்தை உற்பத்தி செய்ய அந்த ஹைட்ரஜனை எரிக்கும்போது அதிலிருந்து கரியமில வாயு வெளியேறாது.

இந்த ஆய்வு நடத்தப்படுவதற்குத் தேவையான மானியத்துக்கு எரிசக்தி சந்தை ஆணையம் 2024ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் அழைப்பு விடுத்தது.

அடுத்த சில ஆண்டுகளில் படிம எரிபொருள் எரிக்கும் அணுகுமுறை தொடரும் என்பதால் அதிலிருந்து வெளியேறும் கரியமில வாயுவைப் பிடித்து அடைத்துவைத்திருக்கும் முறையைக் கண்டறிவது தொடர்பான ஆய்வை சிங்கப்பூர் நடத்துகிறது.

2035ஆம் ஆண்டுக்குள் சிங்கப்பூருக்குத் தேவையான எரிசக்தியில் 50 விழுக்காடு, இயற்கை எரிவாயு மூலம் பெறப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிங்கப்பூர் அதன் 2030ஆம் ஆண்டு பருவநிலை இலக்குகளை எட்ட, மேற்கொள்ளப்படும் முக்கிய நடவடிக்கைகளில் கரியமில வாயுவைப் பிடித்து அடைத்துவைப்பதும் ஒன்றாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்