சிங்கப்பூரின் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் முறை, தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினர், குழுத்தொகுதி ஆகிய மூன்று அரசமைப்பு முறைகளும் காலத்தின் சோதனையை வென்று நாட்டிற்குப் பயன்பட்டுள்ளன என்று மூத்த அமைச்சர் லீ சியன் லூங் கூறியுள்ளார்.
வெளியுறவு அமைச்சுத் தலைமையகத்தில் முன்னாள் துணைப் பிரதமர் எஸ்.ஜெயக்குமார் எழுதிய ‘சிங்கப்பூரின் மூன்று தனித்துவமிக்க சட்டங்களை வகுத்தல்: உள்விவரங்கள்’ எனும் புதிய நூல் அறிமுக நிகழ்ச்சியில் புதன்கிழமை (ஆகஸ்ட் 12) திரு லீ பேசினார்.
இந்த மூன்று அரசமைப்பு முறைகளும் பல்லாண்டு காலமாக நடைமுறையில் எவ்வாறு செயல்படுகின்றன என்பதே இவற்றின் உண்மையான சோதனையாக இருந்தது என்று அவர் குறிப்பிட்டார். மறைந்த முன்னாள் பிரதமர் லீ குவான் யூவும் அப்போதைய இரண்டாம் தலைமுறைத் தலைவர்களும் தாங்கள் உருவாக்கிய இந்த அரசமைப்பு முறைகளுக்குத் தங்களையே உண்மையுடன் உட்படுத்திக்கொண்டனர்.
இவற்றை மதிப்பிடுவதில் சிங்கப்பூரின் நீண்டகால நலன்களும் நிலையான அரசியல் முறையுமே முக்கிய அக்கறைகளாக இருக்க வேண்டும் என்று திரு லீ வலியுறுத்தினார். அந்த வகையில், இவை மூன்றுமே நடைமுறையில் சிறப்பாகச் செயல்பட்டுள்ளன என்பதில் தாம் மகிழ்ச்சியடைவதாக அவர் கூறினார். 1991ல் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் முறை அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, தொடர்ந்து வந்த அரசாங்கங்களும் அதிபர்களும் இணைந்து செயல்பட்டு இந்த அரசமைப்பு முறையை நடத்தி வருகின்றனர்.
அமைச்சர்கள் புதிய சட்டங்களை வகுத்தபோது வெளிப்படையான விவாதங்களை நடத்தினர் என்று பேராசிரியர் ஜெயக்குமார் கூறினார்.
கொவிட்-19 பெருந்தொற்றுக் காலத்தில் மக்களின் உயிர்களையும் வேலைகளையும் காப்பாற்ற அரசாங்கம் நிதியிருப்பைப் பயன்படுத்தியதன் மூலம் தற்போதைய, வருங்காலத் தலைமுறைகளுக்கு நாட்டின் நிதியிருப்பைப் பாதுகாக்கும் எண்ணம் சரியானது என்பது நிரூபிக்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.
பருவநிலை மாற்றம் போன்ற புதிய உலகளாவிய சவால்கள் உருவெடுத்துவரும் சூழலில், நாட்டின் நிதியிருப்பு தொடர்ந்து மிக முக்கியமான ஒன்றாக விளங்கும் என்று பேராசிரியர் ஜெயக்குமார் கருத்துரைத்தார்.
நெருக்கடி இல்லாத சாதாரண காலத்திலும்கூட அரசாங்கம் நிதி சார்ந்த ஒழுக்கத்துடனும் விவேகத்துடனும் நடந்துகொள்ள வேண்டியதுடன் தனது வரவுசெலவுக்குள் இயங்க வேண்டும் என்பதால் இச்சட்டம் இன்னமும் காலத்துக்கு ஏற்புடையதாகவே உள்ளது என்று அவர் மேலும் கூறினார்.
இருப்பினும், தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் முறை திட்டமிட்டபடி செயல்பட அது இன்னும் சீரமைக்கப்பட்டு பரிணமிக்கப்பட வேண்டியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
அரசாங்கத்தைக் கேள்வி கேட்கும் அளவிற்கான நிதி, நிர்வாகத் திறன்களை அதிபர் வேட்பாளர்கள் கட்டாயம் பெற்றிருக்க வேண்டும் என்பதை வாக்காளர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்றார் அவர்.
குழுத்தொகுதி முறை குறித்து கருத்துரைத்த பேராசிரியர் ஜெயக்குமார், அதன் கட்டமைப்பு மாற்ற முடியாத புனிதத்தன்மை கொண்ட ஒன்றல்ல என்ற போதிலும், ஒரு பொதுத் தேர்தலின் முடிவு எதுவாக இருந்தாலும், நாடாளுமன்றத்தில் எப்போதும் அனைத்து இன பிரதிநிதித்துவமும் இருப்பதை அது இன்றளவும் உறுதிசெய்கிறது என்றார்.


