பொத்தோங் பாசிர் தனித்தொகுதியில் மும்முனைப் போட்டி

2 mins read
94959264-6b0c-4533-b9ef-2a356f615f30
கொங் ஹுவா பள்ளியில் வேட்புமனுத் தாக்கல் செய்தபின் சிங்கப்பூர் மக்கள் கட்சியின் திரு வில்லியம்சன் லீ (நடுவில்). - படம்: ‌ஷின்மின்

பொத்தோங் பாசிர் தனித்தொகுதியில் இம்முறை மும்முனைப் போட்டி உறுதிசெய்யப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் மக்கள் கட்சியின் பொருளாளர் வில்லியம்சன் லீ, பொத்தோங் பாசிரில் களமிறங்கும் வேட்பாளர்களில் ஒருவர்.

மக்களின் நம்பிக்கையைப் பெற தம்மால் முடிந்த அளவு முயற்சி செய்யப்போவதாகச் செய்தியாளர்களிடம் கூறிய அவர், பொத்தோங் பாசிர் வட்டாரத்துக்கும் சிங்கப்பூர் மக்கள் கட்சிக்கும் நெருங்கிய தொடர்பிருப்பதைச் சுட்டினார்.

கட்சியின் முன்னாள் தலைமைச் செயலாளர் சியாம் சீ டோங் பொத்தோங் பாசிரில் 27 ஆண்டுகள் கோலோச்சினார். அதையடுத்து 2011ஆம் ஆண்டு மக்கள் செயல் கட்சியின் திரு சித்தோ யி பின் பொத்தோங் பாசிரைக் கைப்பற்றினார்.

அடுத்த ஒன்பது நாள்களுக்குப் பிரசாரத் திட்டங்கள் பற்றிய கேள்விக்கு, “என்னால் முடிந்தவரை அனைத்துக் குடியிருப்பாளர்களையும் சந்திக்கப்போகிறேன்,” என்றார் திரு வில்லியம்சன்.

மக்கள் செயல் கட்சி சார்பில் பொத்தோங் பாசிரில் களமிறங்கியுள்ளார் திரு அலெக்ஸ் இயோ, 46.

மக்கள் செயல் கட்சியின் திரு அலெக்ஸ் இயோ.
மக்கள் செயல் கட்சியின் திரு அலெக்ஸ் இயோ. - படம்: ‌ஷின்மின்

வழக்கறிஞரான அவர், மூன்று தவணைக்காலம் அத்தொகுதி எம்.பி.யாக இருந்த திரு சித்தோ யி பின்னுக்குப் பதிலாக பொத்தோங் பாசிரில் நிற்கிறார்.

2020ஆம் ஆண்டு அரசியலில் கால் பதித்த திரு இயோ, அல்ஜுனிட் குழுத்தொகுதியில் மக்கள் செயல் கட்சி அணியுடன் போட்டியிட்டார்.

திரு இயோ பொத்தோங் பாசிருக்கான மக்கள் செயல் கட்சியின் திட்டங்களை நிறைவேற்றுவதில் குறியாக இருப்பதாகத் தெரிவித்தார்.

“பொத்தோங் பாசிரைப் பிரதிநிதிக்க விரும்புவோர் அங்குக் கொட்டிக் கிடக்கும் கடந்த கால மரபுடைமையையும் குடியிருப்பாளர்களின் எதிர்கால விருப்பங்களையும் ஒருசேர பார்த்துக்கொள்வது முக்கியம்,” என்றார் திரு இயோ.

பொத்தோங் பாசிர் தனித்தொகுதியில் போட்டியிடும் இன்னொரு வேட்பாளர் சீர்திருத்த மக்கள் கூட்டணியின் தலைமைச் செயலாளர் லிம் தியென்.

சீர்திருத்த மக்கள் கூட்டணி வேட்பாளர் திரு லிம் தியென்.
சீர்திருத்த மக்கள் கூட்டணி வேட்பாளர் திரு லிம் தியென். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

மும்முனைப் போட்டி குறித்து திரு லிம்மிடம் கேட்டபோது, “வாக்குகள் பிரிந்துவிடும் என்பது பற்றியெல்லாம் கவலைப்படவேண்டாம் என்று மக்களிடம் கூறியிருக்கிறேன். அப்படி நடக்காது. கடந்த காலத்தில் பார்த்ததுபோல, மும்முனைப் போட்டியோ நான்முனை போட்டியோ, மக்கள் செயல் கட்சியை விரும்பாதோர் உறுதியான எதிர்க்கட்சி வேட்பாளருக்கு வாய்ப்பளித்துள்ளனர்,” என்றார்.

குறிப்புச் சொற்கள்