எதிர்வரும் பொதுத் தேர்தலில் அதிகமான தொகுதிகளில் மும்முனைப் போட்டியை தாம் எதிர்பார்ப்பதாக பாட்டாளிக் கட்சியின் தலைமைச் செயலாளர் பிரித்தம் சிங் கூறியுள்ளார்.
அவற்றைத் தவிர்ப்பதற்கான பேச்சுவார்த்தைகளில் பாட்டாளிக் கட்சி பங்கேற்பதில்லை என்ற அவர், “இது ஒரு திறந்த கட்டமைப்பு. இனி அதிகமான மும்முனைப் போட்டிகளை எதிர்பார்க்கலாம்,” எனக் கூறினார்.
செங்காங், அல்ஜுனிட், ஹவ்காங் தொகுதிகளுடன் வேறெங்கெல்லாம் தேர்தலில் பாட்டாளிக் கட்சி போட்டியிடவுள்ளது என்பதை அது இன்னும் தெரிவிக்கவில்லை.
ஆனால் தெம்பனிஸ், மரின் பரேட், ஈஸ்ட் கோஸ்ட் என மக்கள் செயல் கட்சியின் பிடியிலுள்ள குழுத்தொகுதிகளில் பாட்டாளிக் கட்சியின் உத்தேச வேட்பாளர்கள் காணப்பட்டுள்ளனர்.
செங்காங்கை வெல்வதில் எவ்வளவு நம்பிக்கை உள்ளது எனக் கேட்கப்பட்டபோது, சென்ற பொதுத் தேர்தலில் அங்கு அது நூலிழையில் பெற்ற வெற்றியை திரு சிங் சுட்டினார்.
“கடும் போட்டியாக இருக்கும். சமமான அரசியல் கட்டமைப்பு சிங்கப்பூருக்கு நல்லது என்பதையே குடியிருப்பாளர்களிடம் சொல்ல விரும்புகிறேன்,” என்றார் திரு சிங்.
தற்போது சிங்கப்பூரின் வடகிழக்குப் பகுதி மீதே பாட்டாளிக் கட்சியின் கவனம் இருப்பதாகவும் அவர் கூறினார்.