மே 3ஆம் தேதி நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 27ஆம் தேதி, மூன்று தேர்தல் பிரசாரக் கூட்டங்கள் நடைபெறவிருக்கின்றன. பிரசாரக் கூட்டங்கள் நடைபெறும் இடங்களில் மிகப் பெரிய கூட்டம் திரளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரசாரக் கூட்டங்கள் இரவு 7 மணியிலிருந்து 10 மணி வரை நடைபெறும்.
பிரசாரக் கூட்டங்களில் கலந்துகொள்வோர் முடிந்தவரை பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும்படி ஏப்ரல் 24ஆம் தேதி காவல்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
போக்குவரத்து மாற்றங்களுடன் சாலையின் சில தடங்கள் மூடப்படும் என்றும் போக்குவரத்து மெதுவாக இருக்கும் என்றும் அது குறிப்பிட்டது.
பிரசாரக் கூட்டங்கள் நடைபெறும் இடங்களுக்கு அருகில் உள்ள கார் நிறுத்தும் இடங்களில் குடியிருப்பாளர்கள் மட்டும் வாகனத்தை நிறுத்த அனுமதிக்கப்படுவர்.
அனுமதியின்றி நிறுத்தப்படும் வாகனங்களும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வாகனங்களும் அப்புறப்படுத்தப்படும்.
பிரசாரக் கூட்டங்களில் தடைசெய்யப்பட்ட பொருள்களின் பட்டியலையும் காவல்துறை வெளியிட்டது.
வாணவேடிக்கை, பொம்மைத் துப்பாக்கிகள், கண்ணாடிப் போத்தல்கள், லேசர் விளக்குகள் ஆகியவை அவற்றுள் அடங்கும்.