‘ஏஐ’யால் உருவாக்கப்படும் பொய்ச் செய்திகளை அடையாளம் காண்பதில் ஐந்தில் மூவருக்கு நம்பிக்கையில்லை

‘ஏஐ’யால் உருவாக்கப்படும் பொய்ச் செய்திகளை அடையாளம் காண்பதில் ஐந்தில் மூவருக்கு நம்பிக்கையில்லை

2 mins read
2c185a91-dd4d-411f-8981-7aa0c14226cb
‘ரீட் டு லீட்’ என்ற வாசிப்பு இயக்கத்தைத் தகவல், மின்னிலக்க மேம்பாட்டு துணையமைச்சர் ரஹாயு மஹ்ஸாம் (நடுவில்) செய்வாய்க்கிழமையன்று (ஜூலை 14) தொடங்கி வைத்தார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தால் (ஏஐ) உருவாக்கப்படும் பொய்ச் செய்திகளை அடையாளம் கண்டு, தகவல்களின் உண்மைத்தன்மையைச் சரியாக மதிப்பிடுவதற்குச் சிங்கப்பூரர்களுக்கு உதவும் வகையில் ஓராண்டு காலத் தேசிய வாசிப்பு இயக்கம் செவ்வாய்க்கிழமை (ஜூலை 14) தொடங்கப்பட்டது.

சிங்கப்பூரில் உள்ள 1,150 தொழில்முறை வல்லுநர்கள், மேலாளர்கள், நிர்வாகிகள், தொழில்நுட்பர்கள் ஆகியோரிடம் தேசிய நூலக வாரியமும் கேபிஎம்ஜி நிறுவனமும் இணைந்து அண்மையில் நடத்திய ஒரு பொதுக் கருத்துக்கணிப்பில், ஐந்தில் இரண்டு பேர் மட்டுமே ‘ஏஐ’ சார்ந்த பொய்ச் செய்திகளைத் துல்லியமாக அடையாளம் காணும் தன்னம்பிக்கையைக் கொண்டிருப்பது தெரியவந்துள்ளது.

மேலும், செய்தியின் உண்மைத்தன்மையை அறிந்துகொள்ள ‘ஏஐ’ மூலம் வழங்கப்படும் செய்திச் சுருக்கங்களில் மேற்கோள்காட்டும் தேடுபொறிகள் அல்லது செய்திக் கட்டுரைகளை ஐந்தில் இரண்டு பேர் மட்டுமே சரிபார்க்கின்றனர் என்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

‘ரீட் டு லீட்’ என்ற வாசிப்பு இயக்கத்தைத் தகவல், மின்னிலக்க மேம்பாட்டு துணையமைச்சர் ரஹாயு மஹ்ஸாம் செய்வாய்க்கிழமையன்று (ஜூலை 14) தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்வு ஷென்டன் வேயில் உள்ள ஆசியா ஸ்குவேரின் பொது வளாகத்தில் நடைபெற்றது.

அலுவலகங்களில் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிப்பதன் மூலம், ஊழியர்களின் ‘ஏஐ’ தொழில்நுட்ப அறிவு, தகவல் மற்றும் மின்னிலக்க எழுத்தறிவுத் திறன்களை மேம்படுத்துவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

இதன் ஒரு பகுதியாக, ‘ஏஐ’ மூலம் உருவாக்கப்படும் பொய்ச் செய்திகளை எதிர்கொள்ளும் உத்திகள் குறித்த கல்வி வழிகாட்டித் தொகுப்பு ஒன்றும் உருவாக்கப்படவுள்ளது.

தகவல்கள் நம்மைச் சூழ்ந்திருக்கும் இவ்வேளையில், நிதானமாக வாசிப்பது சிந்தனைத் திறனை மேம்படுத்தி, ‘ஏஐ’ தொழில்நுட்பத்தைச் சரியாகக் கையாள உதவும் என்று இத்தொடக்க விழாவில் கலந்துகொண்ட வல்லுநர்கள் சுட்டிக்காட்டினர்.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

ஊழியர்களின் ‘ஏஐ’ தொழில்நுட்பத் திறன்களை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், அவர்களது ஆற்றலையும் மற்றும் சூழலுக்கேற்ப மாறும் திறன்களையும் வளர்க்க வேண்டியது அவசியம் என்று துணையமைச்சர் ரஹாயு மஹ்ஸாம் வலியுறுத்தினார்.

குறிப்புச் சொற்கள்