சன்டெக் டவர்ஸ் 1, 2ன் மூன்று அலுவலகத் தளங்கள் $135 மில்லியனுக்கு, அதாவது சதுர அடிக்கு $3,350 எனும் மதிப்பீட்டு விலைக்கு விற்பனைக்கு வந்துள்ளன.
அவற்றின் மொத்த நிலப்பட்டா பரப்பளவு ஏறக்குறைய 40,300 சதுர அடி என்று சந்தைப்படுத்தல் முகவையான சாவில்ஸ் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 10) தெரிவித்தது.
அந்த பரப்பளவு முழுமையும் தற்போது முழுமையாக வாடகைக்கு விடப்பட்டுள்ளது. அதனால், உடனடியாக வருமானம் ஈட்டலாம் என்றும் அது நான்கு விழுக்காடு என்ற அளவில் இருக்கும் என்றும் சாவில்ஸ் குறிப்பிட்டுள்ளது.
டவர் 1ல் 27ஆம் தளமும் டவர் 2ல் 12, 13ஆம் தளங்களும் விற்பனைக்கு விடப்பட்டுள்ளன. அவற்றுக்கான ஐந்து நிலப்பட்டாக்கள் 3,498 முதல் 14,273 சதுர அடி வரையிலான பரப்பளவைக் கொண்டுள்ளன.
“நிலையான வருமானம் தரக்கூடிய, முழுமையாக வாடகைக்கு விடப்பட்ட அலுவலகத் தளங்களுக்கு இப்போதும் மிகுந்த தேவை உள்ளது. குறிப்பாக, நிலையான லாபத்தையும் உடைமையுரிமையில் (ownership) நீக்குப்போக்கையும் எதிர்பார்க்கும் முதலீட்டாளர்கள் இதனை விரும்புவர்,” என்று சாவில்ஸ் நிறுவனத்தின் முதலீட்டு விற்பனை, மூலதனச் சந்தைக்கான நிர்வாக இயக்குநர் யாப் ஹுய் யீ கூறினார்.
அண்மைக் காலமாக சன்டெக் சிட்டி மீதான ஆர்வம் அதிகரித்துள்ளதை அடுத்து, இந்த விற்பனை அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. 2025ஆம் ஆண்டில் சதுர அடி $3,200 முதல் $3,364 வரையிலான விலைக்கு அங்கு மூன்று அலுவலகத் தளங்கள் முழுமையாக வாங்கப்பட்டன. அதேபோல், 2026 ஜனவரியிலும் அங்குள்ள ஓர் அலுவலகப் பகுதி சதுர அடிக்கு $3,897 என விலைபோனது.
தற்போது விற்பனைக்கு வந்துள்ள மூன்று தளங்களையும் வெளிநாட்டினரும் நிறுவனங்களும் வாங்கத் தகுதியுடையவர்கள். வாங்குபவரும் விற்பவரும் கூடுதல் முத்திரை வரி செலுத்தத் தேவையில்லை.
அந்த மூன்று தளங்களை வாங்க விரும்புவோர் மே 15ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்குள் தங்கள் விருப்பத்தைத் தெரிவிக்க வேண்டும். அவற்றைத் தனித்தனியாகவோ ஒட்டுமொத்தமாகவோ வாங்கலாம்.

