சாங்கி விமான நிலையத்தில் திருடியதாக வெளிநாட்டவர் மூவர்மீது குற்றஞ்சாட்டப்படும்

சாங்கி விமான நிலையத்தில் திருடியதாக வெளிநாட்டவர் மூவர்மீது குற்றஞ்சாட்டப்படும்

2 mins read
கண்காணிப்புக் கேமராக்களில் குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டனர்
0cd2a3c6-5a07-47e0-8d09-40281bc694bb
ஒரு வழக்கில் இரு மாதர்கள் சாங்கி முனையம் மூன்றில் மாற்று விமானங்கள் ஏறும் பகுதியில் இயங்கும் கடையில் $2,740 மதிப்புள்ள நகைகளை களவாடியுள்ளனர். - படம்: சிங்கப்பூர் காவல்துறை

சாங்கி விமான நிலையத்தில் உள்ள கடைகளில் நடந்த இரண்டு திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்ட சந்தேகத்தின்பேரில் வெளிநாட்டவர் மூவர்மீது குற்றஞ்சாட்டப்படவுள்ளது. இரண்டு சம்பவங்களும் விமான நிலையத்தின் ‘டிரான்சிட்’ பகுதியில் இயங்கும் கடைகளில் கடந்த ஏப்ரல் மாதம் நிகழ்ந்தன.

மூன்று சந்தேக நபர்களும் சிங்கப்பூரிலிருந்து விமானத்தில் புறப்படும் முன்னதாகக் கைது செய்யப்பட்டார்கள். இதன் விவரங்களை காவல்துறை திங்கட்கிழமை (மே 4) அதன் அறிக்கையில் வெளியிட்டது.

இரண்டு சம்பவங்களிலும், காட்சிப் பெட்டகங்களில் வைக்கப்பட்டிருந்த பொருள்கள் காணாமல் போனதைக் கடை ஊழியர்கள் கண்டறிந்து காவல்துறையிடம் தெரிவித்தனர்.

விமான நிலைய முனையம் 1ல் ஏப்ரல் 22 அன்று நடந்த முதல் சம்பவத்தில், 60 வயது ஆடவர் $750 மதிப்புள்ள மூக்குக் கண்ணாடியை கட்டணம் செலுத்தாமல் எடுத்துச் சென்றுவிட்டார்.

மதியம் 2.40 மணிக்கு விமான நிலைய காவல்துறைப் பிரிவுக்குத் தகவல் கிடைத்து, கண்காணிப்பு கேமராக்களில் ஆடவர் அடையாளம் காணப்பட்டார். மற்றொரு கடையில் திருடப்பட்ட தேநீர் பொடிக் கலன்களும் ஆடவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டன.

இரண்டாவது சம்பவத்தில் 59, 61 வயதான இரு மாதர்கள் சாங்கி முனையம் மூன்றில் டிரான்சிட் பகுதியில் உள்ள கடையில் $2,740 மதிப்புள்ள நகைகளை களவாடினர்.

சம்பவம் குறித்து ஏப்ரல் 23ஆம் தேதி காலை 7.10 மணிக்கு விமான நிலையக் காவல்துறைப் பிரிவுக்கு தகவல் கிடைத்து, இருவரும் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் திருடப்பட்ட மூன்று வளையல்கள், கையில் அணியும் மூன்று காப்புகள், இரண்டு மோதிரங்கள், ஒரு கைக்கடிகாரம் ஆகியன மீட்கப்பட்டன. மற்றொரு கடையில் அந்த மாதர்கள் விளையாட்டுப் பொம்மைகளையும் மேலும் சில பொருள்களையும் களவாடியது பிறகு கண்டறியப்பட்டது.

குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் சிறையும் அபராதமும் மூவருக்கும் தண்டனைகளாக விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்