தெம்பனிஸ் விரைவுச் சாலையில் ஜனவரி 4ஆம் தேதி காலை நான்கு கார்கள் மோதிய விபத்தில் காயமடைந்த மூவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
ஆக்ஸிடண்ட்.காம் இணையத்தளத்தில் பதிவேற்றப்பட்ட காணொளியில் இரண்டு கார்கள் வலதுகோடி தடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததைக் காண முடிந்தது. சுற்றிலும் உடைந்த பொருள்கள் சிதறிக் கிடந்தன.
சாங்கியை நோக்கிச் செல்லும் விரைவுச் சாலையில் ஹாலுஸ் லிங்க் சாலை நோக்கி வெளியேறும் பாதையில் விபத்து நிகழ்ந்தது. இது குறித்து காலை 9.30 மணியளவில் தகவல் கிடைத்ததாக காவல்துறையும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் தெரிவித்தன.
விபத்தில் சிக்கிய 28 வயது பயணியும் 61, 28 வயதில் இருந்த இரு ஓட்டுநர்களும் சுயநினைவுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.
இதற்கிடையே காலை 10.11 மணியளவில் ஃபேஸ்புக்கில் வெளியிட்ட பதிவில் விபத்து காரணமாக 858, 969 பேருந்து சேவைகளில் 15 முதல் 20 நிமிடம் வரை தாமதம் ஏற்படலாம் என்று டவர் டிரான்சிட் அறிவித்தது.
பிற்பகல் 12.47 மணிக்கு வெளியிட்ட மற்றொரு பதிவில் போக்குவரத்து வழக்கு நிலைக்குத் திரும்பிவிட்டதாக அது கூறியது.

