குடிநுழைவுக் குற்றவாளிகளுக்கு அடைக்கலம் அளித்த 3 இந்தியர் மீது குற்றச்சாட்டு

சட்டவிரோதமாகத் தங்கியிருந்த மூன்று இந்திய நாட்டவர்களுக்கும் தண்டனை

குடிநுழைவுக் குற்றவாளிகளுக்கு அடைக்கலம் அளித்த 3 இந்தியர் மீது குற்றச்சாட்டு

2 mins read
0093ac94-0ba0-4f7b-8e8d-ec359b2cbfae
குடிநுழைவுக் குற்றவாளிகளுக்கு அடைக்கலம் அளித்ததற்காக மூன்று இந்திய நாட்டவர்கள் மீது குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையம் குற்றம் சாட்டியுள்ளது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

சட்டவிரோதமாகத் தங்கியிருந்த குடிநுழைவு குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாக மூன்று இந்திய நாட்டவர்கள்மீது வியாழக்கிழமை (ஆகஸ்ட் 27) குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மூவரும் மூன்று வெவ்வேறு சம்பவங்களில் தொடர்புடையவர்கள் என்று குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையம் வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.

முதல் சம்பவத்தில், சாய் சீ ரோட்டில் உள்ள தமது வீட்டில் அனுமதிக்கப்பட்ட காலக்கெடுவுக்கு மேல் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த 19 வயது சர்மா கார்த்திக் என்பவருக்கு அடைக்கலம் அளித்ததாக பட்டீல் சுபஹம் பகவான், 27 மீது குற்றம் சாட்டப்பட்டது.

2025 செப்டம்பர் முதல் 2026 ஏப்ரல் மாதம் வரையில் சாய் சீ ரோட்டில் சர்மா தங்கியிருக்க பட்டீல் அனுமதித்துள்ளது விசாரணையில் தெரியவந்தது.

குடிநுழைவுக் குற்றத்திற்காக சர்மாவிற்கு $4,000 அபராதம் விதிக்கப்பட்டு, அவர் தாய்நாட்டிற்கு நாடுகடத்தப்பட்டார். அவர் சிங்கப்பூருக்கு மீண்டும் வருவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

மற்றொரு சம்பவத்தில், ஈசூன் ரிங் ரோட்டில் உள்ள வீட்டில் 31 வயது குல்ஷனுக்கு அடைக்கலம் அளித்ததாக லட்டி, 31 என்பவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. குல்ஷன் சிங்கப்பூரில் தங்குவதற்கான உரிய விசா அனுமதியை வைத்திருக்கிறாரா என்று லட்டி அறிந்துகொள்ளவில்லை. குல்ஷன் 2023 ஏப்ரல் 5ஆம் தேதி முதல் சிங்கப்பூரில் சட்டவிரோதமாகத் தங்கியுள்ளார்.

நீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்ட குல்ஷனுக்கு 16 வாரங்கள் சிறைத்தண்டனையும் மூன்று பிரம்படிகளும் விதிக்கப்பட்டு அவர் நாடுகடத்தப்பட்டார். அவர் சிங்கப்பூருக்கு மீண்டும் வருவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

மூன்றாவதாக, ஜாலான் ரூமா திங்கியில் உள்ள வீட்டில் சித்து ஹர்ப்ரீத் சிங், 36, என்பவருக்குத் தஞ்சமளித்ததாக சும்பர் தீரஜ் குமார், 37, என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வாண்டு ஏப்ரல் 30ஆம் தேதி விசா முடிந்த பின்னரும் சட்டவிரோதமாக சித்து சிங்கப்பூரில் தங்கியிருந்தார்.

சித்துவிற்கு $4,000 அபராதம் விதிக்கப்பட்டது.

சட்டவிரோதமாகத் தங்கியிருப்போருக்கு அடைக்கலம் அளிப்பவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என குடிநுழைவு,சோதனைச் சாவடிகள் ஆணையம் எச்சரித்துள்ளது.

வீட்டை வாடகைக்கு விடுவோர், வாடகைக்கு எடுப்போரின் உண்மையான கடப்பிதழ், வேலை அனுமதி அட்டைகளை முறையான அரசாங்க அமைப்புகள் மூலம் சரிபார்க்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

சட்டவிரோதமாகத் தங்கியிருப்போருக்குத் தஞ்சமளிப்பவர்கள் மீது குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையம் கடுமையான நடவடிக்கை எடுக்கும்.

தெரிந்தே அடைக்கலம் அளிப்பவர்களுக்கு 6 மாதம் முதல் 2 ஆண்டுகள் வரை சிறை, $6,000 வரை அபராதமும் விதிக்கப்படலாம். கவனக்குறைவால் அடைக்கலம் அளித்தால் $6,000 வரை அபராதம், 12 மாதம் வரை சிறை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்சட்டவிரோதம்குடியேறிகள்இந்தியர்சோதனைச் சாவடிசட்டவிரோதக் குடிநுழைவுகுடிநுழைவு