பதிவு நீக்கப்பட்ட வாகனங்களைப் பயன்படுத்திய குற்றத்தை எதிர்நோக்கும் மூவர்

பதிவு நீக்கப்பட்ட வாகனங்களைப் பயன்படுத்திய குற்றத்தை எதிர்நோக்கும் மூவர்

1 mins read
e007dbe0-03ed-43fd-8557-0e4dd5109335
சம்பந்தப்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன அல்லது அப்புறப்படுத்தப்பட்டன என்று ஆணையம் கூறியுள்ளது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பதிவுநீக்கம் செய்யப்பட்ட வாகனங்களைப் பயன்படுத்தியது தொடர்பான வெவ்வேறு சம்பவங்களில் மூன்று ஆடவர்கள் மீது நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட உள்ளது.

அவர்களில் இருவர், பதிவிலிருந்து அகற்றப்பட்ட வாகனங்களை சிங்கப்பூரின் நிலச் சோதனைச் சாவடிகளைக் கடந்துசெல்ல பலமுறை பயன்படுத்தியதாக நிலப் போக்குவரத்து ஆணையம் புதன்கிழமை (மே 13) வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டது.

அத்தகைய வாகனத்தைப் பயன்படுத்தியதோடு மற்றவர் பயன்படுத்த அனுமதித்ததாக 63 வயது ஆடவர் மீது குற்றம் சுமத்தப்பட உள்ளது. அந்த வாகனம் மூலம் 2024ஆம் ஆண்டுக்கும் 2025ஆம் ஆண்டுக்கும் இடையில் பலமுறை சிங்கப்பூரின் நிலச் சோதனைச் சாவடிகளை அவர் கடந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

மற்றொரு சம்பவத்தில் பொய்யான அடையாளக் குறியைக் கொண்ட, பதிவிலிருந்து அகற்றப்பட்ட வாகனத்தைப் பயன்படுத்தியதாக 62 வயது ஆடவர்மீது குற்றம் சுமத்தப்படும். உரிமமும் காப்புறுதியும் இல்லாத வாகனத்தை அவர் பயன்படுத்தியதாகவும் கூறப்பட்டது.

இந்த இருவர் மீதும் ஜூன் 4ஆம் தேதி குற்றம் சுமத்தப்படும்.

மூன்றாவது சம்பவத்தில், பதிவுநீக்கம் செய்யப்பட்ட வாகனங்களைப் பயன்படுத்தத் துணைபோனது, போலியான அடையாளக் குறியீடுகளைக் காட்சிப்படுத்தியது, உரிமமற்ற, காப்பீடு செய்யப்படாத வாகனங்களைப் பயன்படுத்த அனுமதித்தது ஆகிய குற்றச்சாட்டுகள் 56 வயது ஆடவர்மீது மே 14ஆம் தேதி நீதிமன்றத்தில் சுமத்தப்பட உள்ளன.

மூன்று சம்பவங்களிலும் தொடர்புடைய வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன அல்லது அப்புறப்படுத்தப்பட்டன என்று ஆணையம் கூறியுள்ளது.

குறிப்புச் சொற்கள்