கொலை நடந்த இடத்தில் காவல்துறை போட்ட தடுப்பைத் தாண்டிச் செல்ல அனுமதிக்காத ஒரு காவல்துறை அதிகாரியை ஏளனம் செய்து பேசியதற்காக மூன்று ஆடவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அலெக்ஸ் குமார் ஞானசேகரன், 38, என்பவருக்கு $4,000 அபராதம் விதிக்கப்பட்டது. அதே நேரத்தில், முகம்மது டினோ மார்சியானோ அப்துல் வஹாப், 45, முகம்மது யூசோஃப் முகம்மது யஹ்யா, 33, இருவருக்கும் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 28) தலா $5,000 அபராதம் விதிக்கப்பட்டது.
அரசு ஊழியராக தமது கடமையைச் செய்த ஒரு காவல்துறை அதிகாரியிடம் புண்படுத்தும் வார்த்தைகளைப் பயன்படுத்தியதாக இவர்கள் மூவரும் குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.
டினோ, யூசோஃப் இருவரும் இதற்கு முன்னரும் அரசு ஊழியர்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டுள்ளனர்.
2025 ஜனவரியில் ஒரு காவல்துறை அதிகாரியை நோக்கித் தரக்குறைவான வார்த்தைகளைப் பேசியதற்காக தொல்லைப்படுத்துதலில் இருந்து பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் டினோ குற்றம் சாட்டப்பட்டார். இதற்கு முன்னர் 2022ல் ஒரு அரசு ஊழியருக்குக் காயம் ஏற்படுத்தியது தொடர்பாக யூசோஃப் மீதான குற்றம் நிரூபணமானது.
அலெக்ஸ், டினோ, யூசோஃப் மூவரும் காவல்துறை அதிகாரியைக் கேலி செய்ததைக் காணொளி எடுத்த மோகனன் வி.பாலகிருஷ்ணன், 39, என்பவருக்குச் செப்டம்பரில் $3,500 அபராதம் விதிக்கப்பட்டது.
செப்டம்பர் 22ஆம் தேதி காலை 5 மணியளவில், மதுபானக்கூடத்தில் இரவு முழுவதும் மது அருந்திவிட்டு அங்கிருந்து வெளியேறிய இந்த நால்வரும், கிச்சனர் சாலைக்கு அருகே சேம் லியோங் சாலை பின்புறத்தில் நடந்து சென்றபோது ஒரு காவல்துறை தடுப்பைப் பார்த்தனர்.
அந்தப் பகுதியில் ஒரு கொலை நடந்ததால் காவல்துறை அதைச் சுற்றி தடுப்பு போட்டிருந்தது.
தொடர்புடைய செய்திகள்
அங்கிருந்து விலகி இருக்குமாறு காவல்துறை அதிகாரி ஒருவர் அறிவுறுத்திய போதிலும், அதற்கு ஒத்துழைக்க மறுத்த இவர்கள், தடுப்பைத் தாண்டிச் செல்வதில் விடாப்படியாக இருந்தனர்.
காவல்துறை அதிகாரியை இவர்கள் கேலி செய்து சிரித்து இருந்ததைக் காட்டும் காணொளி நீதிமன்றத்தில் காட்டப்பட்டபோது, மூன்று ஆண்களும் எந்த உணர்ச்சியையும் வெளிப்படுத்தாமல் இருந்தனர்.

