உள்ளூர் குற்றக் கும்பலுடன் தொடர்பில் உள்ளதாக நம்பப்படும் மூன்று பேர் மோசடிச் செயலில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
இந்நிலையில் அந்த மூவர்மீதும் செவ்வாய்க்கிழமை (மே 13) மோசடி, கணினியைத் தவறாகப் பயன்படுத்தியது உள்ளிட்ட குற்றங்களின்கீழ் குற்றஞ்சாட்டப்பட்டது.
லோ ஸி வெய், 35 என்னும் நபர் ஐந்து குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறார். டில்லன் ஜாங் வெய் ஹோங், 27 என்பவர் ஒன்பது குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறார்.
மூன்றாவது நபரான சூக் ஜின் ஹை,36, அதிகபட்சமாக 11 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறார். சந்தேக நபர்கள் மூவரும் சிங்கப்பூரர்கள் என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
மூன்று ஆடவர்களும் 40 வங்கிக் கணக்குகளைத் தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது.
அது 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்கும் 2024ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் நடந்ததாகக் கூறப்படுகிறது.
மூவரும் இணைந்து குற்றச்செயலில் ஈடுபட்டு 284,000 வெள்ளிக்கு மேல் ஈட்டியதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
மூவர்மீதும் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணை மே 19ஆம் தேதி நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.