ஜூரோங் வீவக வீட்டில் கொள்ளை; பெண் உட்பட மூவர் கைது

ஜூரோங் வீவக வீட்டில் கொள்ளை; பெண் உட்பட மூவர் கைது

1 mins read
d6e3d40b-0bab-4ce4-a08c-8d6bdf091c76
24 வயதுடைய ஆடவர்கள் இருவர், 24 வயது பெண் ஆகியோர் கொள்ளையடிக்கும் நோக்கத்தோடு வேண்டுமென்றே காயத்தை ஏற்படுத்தியதற்காகக் கைது செய்யப்பட்டனர். - படம்: ஷின்மின்

ஜூரோங்கில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடு ஒன்றில் தங்களை உள்ளே வைத்துப் பூட்டிக்கொண்ட மூன்று பேர், வேண்டுமென்றே காயத்தை ஏற்படுத்தியதற்காகவும் கொள்ளையடித்ததற்காகவும் கைது செய்யப்பட்டனர்.

வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 3) இரவு 10.10 மணியளவில் கொள்ளையடிக்கும் நோக்கத்தோடு வேண்டுமென்றே காயத்தை ஏற்படுத்திய வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொண்டதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

அப்போது இரண்டு ஆண்களும் ஒரு பெண்ணும் கதவைத் திறக்க மறுத்து, புளோக் 262 ஜூரோங் ஈஸ்ட் ஸ்திரீட் 24ல் உள்ள ஒரு வீட்டிற்குள் தங்களை உள்ளே வைத்துப் பூட்டிக்கொண்டனர்.

சிறப்பு நடவடிக்கைப் படை, நெருக்கடிநிலை பேச்சுவார்த்தைப் பிரிவு, சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை ஆகியவற்றின் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஓர் உயிர்காப்பு மிதவையை நிறுவியதாகவும் பேரிடர் உதவி மற்றும் மீட்புக் குழுவைச் சேர்ந்த மீட்புப் பணியாளர்கள் தயார்நிலையில் வைக்கப்பட்டிருந்ததாகவும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.

இரவு 11.40 மணியளவில், காவல்துறை அதிகாரிகள் அந்த வீட்டிற்குள் நுழைந்தனர்.

24 வயதுடைய ஆடவர்கள் இருவர், 24 வயது பெண் ஆகியோர் கொள்ளையடிக்கும் நோக்கத்தோடு வேண்டுமென்றே காயத்தை ஏற்படுத்தியதற்காகக் கைது செய்யப்பட்டனர்.

சிறிய காயங்களுக்காக ஒருவரைப் பரிசோதித்ததாக அதிகாரிகள் கூறினர். ஆனால் அந்த நபர் மருத்துவமனைக்குச் செல்ல மறுத்துவிட்டார்.

விசாரணை தொடர்கிறது.

குறிப்புச் சொற்கள்