பணமோசடி தொடர்பில் மூவர் கைது

1 mins read
9336bc90-7fee-487f-a33d-2b8b83c75eab
மூன்றாவது நபர், கிட்டத்தட்ட $96,000 மதிப்புள்ள ‘கிரிப்டோகரன்சி’ எனும் மின்னிலக்க நாணயத்தை ‘கிரிப்டோ’ கணக்கு ஒன்றிற்கு மாற்றியதாகக் காவல்துறை கூறியது. - படம்: பிக்சாபே

கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கும் குற்றத்தில் ஈடுபட்டதாக மூவர்மீது வெள்ளிக்கிழமை (மே 9) குற்றம் சுமத்தப்பட்டது.

வெவ்வேறு சந்தர்ப்பங்களில் அவர்கள் குற்றச்செயலில் ஈடுபட்டதாகவும் அவர்களில் இருவர் தங்களின் வங்கிக் கணக்குகளில் மோசடியிலிருந்து கிடைத்த $350,000க்கும் அதிகமான தொகையைப் பெற்றதாகவும் கூறப்பட்டது.

மூன்றாவது நபர், கிட்டத்தட்ட $96,000 மதிப்புள்ள ‘கிரிப்டோகரன்சி’ எனும் மின்னிலக்க நாணயத்தை ‘கிரிப்டோ’ கணக்கு ஒன்றிற்கு மாற்றியதாகக் காவல்துறை கூறியது.

மேலும், அந்தப் பணம் வெளிநாட்டு மோசடியால் பாதிக்கப்பட்டவருக்குச் சொந்தமானது என விசாரணையில் கண்டறியப்பட்டதாகவும் அது தெரிவித்தது.

குற்றச்செயலிலிருந்து பெறப்பட்ட பணத்தைக் கையாண்டதாக 37 வயது டான் லிசென்மீது ஒரு குற்றச்சாட்டும் அதேபோன்ற குற்றத்திற்காக 42 வயது ஜியாங் தேஷெங்மீது இரு குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டன.

43 வயது வூ சுவானி மீது பணமோசடி தொடர்பான மூன்று குற்றச்சாட்டுகளும், ஒரு மோசடிக் குற்றச்சாட்டும், கணினி அமைப்பைத் தவறாகப் பயன்படுத்தியதாக இரு குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டன.

வூவும் டானும் சிங்கப்பூரைச் சேர்ந்தவர்கள். ஜியாங் சீன நாட்டைச் சேர்ந்தவர்.

குறிப்புச் சொற்கள்