ஹுவாவெய், சுகாதார அமைச்சின் நிறுவனத்தில் பணியாற்றிய மூவர் ஊழலில் ஈடுபட்டதாக சந்தேகம்

2 mins read
28728dae-b7f3-43e4-b74e-a9f804c0aeed
இடமிருந்து பெங் மிங், இங் கா சியாங், சியாங் சீ செங். - படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஹுவாவெய் நிறுவனம், சுகாதார அமைச்சின்கீழ் உள்ள ஒரு நிறுவனம் ஆகியவற்றில் வேலை செய்த சிங்கப்பூரைச் சேர்ந்த ஆடவர்கள் மூவர் ஊழலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.

சந்தேக நபர்களில் இருவர் ஹுவாவெய் இன்டர்நே‌ஷனல் தொலைத்தொடர்பு நிறுவனத்திலும் சுகாதார அமைச்சின்கீழ் செயல்படும் நிறுவனத்திலும் வேலை செய்தவர்கள். அம்மூவரில் ஒருவருக்கு, 18,000 வெள்ளிக்கும் அதிக மதிப்பிலான பிரான்ஸ் தலைநகர் பாரிசுக்கான பயணத்துடன் தொடர்பிருப்பதாக நம்பப்படுகிறது.

குற்றம் நிகழ்ந்ததாக நம்பப்படும் காலகட்டத்தில் ஹுவாவெய்யில் வேலை செய்த 39 வயது பெங் மிங் மீது புதன்கிழமையன்று (ஜனவரி 22) ஊழலில் ஈடுபட்டதாக நான்கு குற்றச்சாட்டுகளும் ஏமாற்றியதாக ஒரு குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டன.

அதேபோல், சுகாதார அமைச்சின்கீழ் செயல்படும் தற்போது சினேப்ச (Synapxe) என்ற பெயரைக் கொண்ட ‘இன்டிகிரேட்டட் ஹெல்த் இன்ஃபர்மே‌ஷன் சிஸ்டம்ஸ்’ (IHiS) நிறுவனத்தில் பணியாற்றிய 37 வயது இங் கா சியாங் மீது புதன்கிழமையன்று ஐந்து குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. லஞ்சம் பெற முயன்றதாக சுமத்தப்பட்ட நான்கு குற்றச்சாட்டுகள் அவற்றில் அடங்கும்.

லஞ்சம் பெற்றதாகவும் அவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11லிருந்து 20ஆம் தேதிக்கு இடைப்பட்ட காலத்தில் பாரிசுக்குப் பயணம் மேற்கொண்டபோது அவர் லஞ்சம் பெற்றதாக சந்தேகிக்கப்படுகிறது.

மூன்றாவது சந்தேக நபரான 50 வயது சியாங் சீ சாங் மீது, அந்த பாரிஸ் பயணம் தொடர்பிலான ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. அவர் நெரா டெலிகம்யூனிகே‌ஷன்ஸ் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

2020லிருந்து 2022ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் பல்வேறு ஊழல் குற்றங்களில் பெங் ஈடுபட்டதாக நம்பப்படுகிறது என்று நீதிமன்ற ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாரிஸ் பயணம் தொடர்பில் 2022 மார்ச் மாதம் வந்த காலகட்டத்தில் அவர், சியாங்குடன் இணைந்து இங்குக்கு லஞ்சம் தர முயன்றதாக சந்தேகிக்கப்படுகிறது.

அதோடு, 2022 பிப்ரவரி மாதம் 22ஆம் தேதியன்று பெங் ஏமாற்றுச் செயலில் ஈடுபட்டதாகவும் நம்பப்படுகிறது.

பெங், இங், சியாங் ஆகிய மூவரின் வழக்கு விசாரணையும் வரும் மார்ச் மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்