உயர்மாடி வளாகங்களுக்கு மாறும் மேலும் மூன்று தொடக்கக் கல்லூரிகள்

2 mins read
ce494945-ada8-4f2b-bac5-dfaa6a817924
எண் 800 கார்ப்பரேஷன் சாலையில் உள்ள பழைய ஜூரோங் தொடக்கக் கல்லூரி வளாகம் இடிக்கப்படுகிறது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

2028 ஜனவரியில் மேலும் மூன்று தொடக்கக் கல்லூரிகள் உயர்மாடி வளாகங்களுக்கு மாறவிருக்கின்றன.

தெமாசெக் தொடக்கக் கல்லூரி, ஆண்டர்சன் சிராங்கூன் தொடக்கக் கல்லூரி, ஜூரோங் பைனியர் தொடக்கக் கல்லூரி ஆகிய அவை, சிறிய நிலப்பகுதிகளில் அமையும் வளாகங்களுக்கு மாறவுள்ளன. என்றாலும், அந்தக் கட்டடங்கள் 12 மாடிகள் வரை கொண்டிருக்கும்.

ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் பெற்ற குத்தகை ஆவணங்களில் இது தெரியவந்துள்ளது.

2020ல் திறக்கப்பட்ட யுனோயா தொடக்கக் கல்லூரி வளாகம் 12 மாடி, 10 மாடிக் கட்டடங்களைக் கொண்டுள்ளது.

தற்போதுள்ள வளாகங்களைவிட குறைவான நிலப்பரப்பு கொண்டிருக்கும் வளாகங்களுக்கு தொடக்கக் கல்லூரிகள் மாறினாலும், கூடுதல் மாடிகள் இருப்பதால் கூடுதல் இடவசதி இருக்கும். திடல், தட விளையாட்டுகளுக்கான வசதிகளையும் அவை கொண்டிருக்கும்.

தொடக்கக் கல்லூரிகளுக்குப் புத்துயிரூட்டும் திட்டத்தின் ஒரு பகுதியாக, பழைய தொடக்கக் கல்லூரிகளின் வளாகங்கள் புதுப்பிக்கப்படும் அல்லது மீண்டும் கட்டியெழுப்பப்படும் என கல்வி அமைச்சு 2019 மார்ச்சில் அறிவித்திருந்தது.

அக்டோபர் 14ஆம் தேதி தெமாசெக் தொடக்கக் கல்லூரிக்கான கட்டுமானக் குத்தகை கோரப்பட்டது. ஆண்டர்சன் சிராங்கூன் தொடக்கக் கல்லூரி, ஜூரோங் பைனியர் தொடக்கக் கல்லூரி வளாக வடிவமைப்புப் பணி இடம்பெற்று வருவதாக அக்டோபர் 28ஆம் தேதி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கல்வி அமைச்சு கூறியிருந்தது. அடுத்த சில மாதங்களில் அது கட்டங்கட்டமாக நிறைவு செய்யப்படும் என அது சொன்னது.

எண் 22 பிடோக் சவுத் சாலையில் அமையும் தெமாசெக் தொடக்கக் கல்லூரியின் புதிய வளாகம், ஏறக்குறைய 4.5 ஹெக்டர் நிலப்பரப்பையும் ஏறத்தாழ 50,900 சதுர மீட்டர் மொத்த தரைப் பரப்பளவையும் கொண்டிருக்கும் என்பதைக் கல்வி அமைச்சின் கட்டுமானக் குத்தகை ஆவணங்கள் காட்டின.

எண் 22 பிடோக் சவுத் சாலையில் உள்ள பழைய தெமாசெக் தொடக்கக் கல்லூரி வளாகம்.
எண் 22 பிடோக் சவுத் சாலையில் உள்ள பழைய தெமாசெக் தொடக்கக் கல்லூரி வளாகம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

எண் 4500 அங் மோ கியோ அவென்யூ 6ல் அமையும் ஆண்டர்சன் சிராங்கூன் தொடக்கக் கல்லூரியின் புதிய வளாகம், ஏறக்குறைய 4.2 ஹெக்டர் நிலப்பரப்பையும் 40,500 சதுர மீட்டர் தரைப் பரப்பளவையும் கொண்டிருக்கும்.

2022 அக்டோபரில் எடுக்கப்பட்ட இந்தப் படத்தில், பழைய ஆண்டர்சன் தொடக்கக் கல்லூரி வளாகம்.
2022 அக்டோபரில் எடுக்கப்பட்ட இந்தப் படத்தில், பழைய ஆண்டர்சன் தொடக்கக் கல்லூரி வளாகம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

எண் 800 கார்ப்பரேஷன் சாலையில் அமையும் ஜூரோங் பைனியர் தொடக்கக் கல்லூரியின் புதிய வளாகம், ஏறத்தாழ 4.1 ஹெக்டர் நிலப்பரப்பையும் ஏறக்குறைய 40,400 சதுர மீட்டர் தரைப் பரப்பளவையும் கொண்டிருக்கும்.

குறிப்புச் சொற்கள்