புக்கிட் தீமா விரைவுச்சாலையில் உட்லண்ட்ஸ் அவென்யூ 3க்கு அருகே வெள்ளிக்கிழமை (மே 29) இரு வெவ்வேறு விபத்துகள் நடந்தன.
அன்றைய தினம் மூன்று கார்களும் இரு மோட்டர்சைக்கிள்களும் சம்பந்தப்பட்ட விபத்தில் மோட்டார் சைக்கிளோட்டிகள் இருவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
விபத்து குறித்து தங்களுக்கு அன்று மாலை 4.15 மணியளவில் தகவல் கிடைத்ததாகக் காவல்துறையும் குடிமைத் தற்காப்புப் படையும் தெரிவித்தன.
விபத்தில் காயமடைந்த 18, 55 வயதுடைய மோட்டார் சைக்கிளோட்டிகள் இருவர், சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையால் கூ டெக் புவாட் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது சுயநினைவுடன் இருந்தனர்.
ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றப்பட்ட விபத்து தொடர்பான காணொளியில், விரைவுச்சாலையின் ஆக வலதுபுறப் பாதையில் மலேசியப் பதிவு எண் கொண்ட சிவப்பு நிறக் காரின் பின்னால் மோட்டார்சைக்கிள் ஒன்று மோதியதைக் காண முடிந்தது.
அந்த மோதலின் தாக்கத்தால், மோட்டார்சைக்கிள் இடதுபுறமாக இரண்டு பாதைகளைக் கடந்து சறுக்கிச் சென்றதையும், காரின் பின்பக்கக் கண்ணாடி உடைந்த நிலையிலும், அதன் பின்பகுதியின் இடப்பக்கம் சேதமடைந்த நிலையிலும் பார்க்கலாம்.
பின்னர், மருத்துவ உதவியாளர்கள் குழு, தூக்குப்படுக்கையுடன் ஆடவர் ஒருவருக்கு உதவுவதும் அதில் பதிவானது.
சாலையோரத்தில் மற்றொரு மோட்டார்சைக்கிள் இருப்பதும் அங்கு இதர மருத்துவ உதவியாளர்கள் உதவி வழங்கிக்கொண்டிருப்பதும் அதில் காணப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
அதே தினம், இரவு வேளையில் நடந்த ஒரு மோட்டார் சைக்கிளும் இரு கார்களும் சம்பந்தப்பட்ட மற்றொரு விபத்தில் காயமுற்ற 23 வயது மோட்டார் சைக்கிளோட்டி, சுயநினைவுடன் கூ டெக் புவாட் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
விபத்து குறித்து அன்று இரவு 9 மணியளவில் தங்களுக்குத் தகவல் கிடைத்ததாக காவல்துறையும் குடிமைத் தற்காப்புப் படையும் தெரிவித்தன.
அங்கிருந்த வழிப்போக்கர்கள் சிலர் மோட்டார் சைக்கிளோட்டிக்கு உதவ விரைந்தனர்.

