தெங்கா, சுவா சூ காங், உட்லண்ட்சிற்கு மூன்று புதிய பேருந்துச் சேவைகள்

தெங்கா, சுவா சூ காங், உட்லண்ட்சிற்கு மூன்று புதிய பேருந்துச் சேவைகள்

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

20 Sep 2026 - 10:23 pm

2 mins read

தெங்கா, சுவா சூ காங், உட்லண்ட்ஸ் ஆகிய குடியிருப்புப் பேட்டைகளில் பயணிகளுக்காக மூன்று புதிய பேருந்துச் சேவைகள் விரைவில் தொடங்கப்படவுள்ளன.

2028 நடுப்பகுதியில் ஜூரோங் வட்டார ரயில் சேவை இயக்கத்திற்கு வரும் வரை, அதனைத் தொடர்ந்து செல்லும் வகையில் இடைமாற்றுப் பேருந்துச் சேவைகளும் இயக்கப்படவுள்ளன.

தெங்கா சமூக மன்றத்தில் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 20) நடைபெற்ற இலையுதிர் விழாக் கொண்டாட்டத்தில் பேசிய போக்குவரத்து அமைச்சர் ஜெஃப்ரி சியாவ், வேகமாக வளர்ந்து வரும் தெங்கா குடியிருப்புப் பேட்டைக்குப் போக்குவரத்து இணைப்புகளை வழங்குவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றார்.

ஓராண்டுக்கு முன்பு 12,000ஆக இருந்த தெங்கா குடியிருப்பாளர்களின் எண்ணிக்கை, தற்போது 28,000ஆக அதிகரித்துள்ளதைச் சுட்டிய அவர், அடுத்த ஈராண்டுகளில் இந்த எண்ணிக்கை 57,000ஆக உயரும் என்று குறிப்பிட்டார்.

கடந்த ஆண்டில் பார்க் பாயிண்ட் கடைத்தொகுதி, தெங்கா பலதுறை மருந்தகம் உள்ளிட்ட பல வசதிகள் தெங்காவில் திறக்கப்பட்டுள்ளன. மே 2025ல் சுவா சூ காங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக அமைச்சர் சியாவ் பொறுப்பேற்றபோது அங்கு நான்கு பேருந்துச் சேவைகள் மட்டுமே இருந்தன. தற்போது இந்த எண்ணிக்கை 11ஆக உயர்ந்துள்ளது.

பேருந்துகள், ஓட்டுநர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், முழு நாள் சேவையை நடத்துவதைவிட பல இடங்களுக்கு இணைப்புகளை ஏற்படுத்துவதற்கே முன்னுரிமை அளிக்கப்பட்டது.

புதிய சேவைகளான 873/873M, 874 இரண்டும் அக்டோபர் 25 முதல் சேவையைத் தொடங்கும். பேருந்துச் சேவை 873 தெங்காவை புக்கிட் கோம்பாக், ஹில்வியூ, ஹியூம் ரயில் நிலையங்களுடன் இணைக்கும். பேருந்துச் சேவை 874 தெங்காவையும் சுவா சூ காங்கையும் நேரடியாக இணைக்கும்.

மூன்றாவது பேருந்துச் சேவையான 968, 2027ல் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ள ஜோகூர் பாரு-சிங்கப்பூர் ஆர்டிஎஸ் இணைப்புக்கு உதவியாக இருக்கும்.

பேருந்துச் சேவை 968, உட்லண்ட்ஸ் தற்காலிகப் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட்டு, குடியிருப்பாளர்களை உட்லண்ட்ஸ் நார்த், உட்லண்ட்ஸ் சவுத், அட்மிரல்டி ரயில் நிலையங்களுடன் இணைக்கும்.

தற்போதைய பேருந்துச் சேவைகளான 674, 861ல் கூடுதல் பயணங்கள் சேர்க்கப்பட்டு, பயணிகளின் காத்திருப்பு நேரம் குறைக்கப்படும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்