கடந்த 2023ஆம் ஆண்டு தென்கிழக்காசிய விளையாட்டுகளுக்கான தெரிவு முறைக்குப் பொய்யான நீச்சல் நேரங்களைச் சமர்ப்பித்ததன் தொடர்பில் மூவர்மீது வியாழக்கிழமை (மார்ச் 12) நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படும்.
சிங்கப்பூர்த் தேசிய ஒலிம்பிக் மன்றம் அது பற்றிப் புகார் செய்ததாகக் காவல்துறை கூறியது.
‘சிங்கப்பூர் அன்டர்வாட்டர் ஃபெடரேஷன்’ பொய்யான நீச்சல் நேர முடிவுகளைச் சமர்ப்பித்த சந்தேகத்தின்பேரில் அந்தப் புகார் செய்யப்பட்டது.
அந்த முடிவுகளைச் சமர்ப்பித்ததால், கம்போடியாவில் 2023ஆம் ஆண்டு தென்கிழக்காசிய விளையாட்டுகளின்போது நடைபெற்ற நீச்சல் போட்டிகளுக்கு ‘சிங்கப்பூர் அன்டர்வாட்டர் ஃபெடரேஷன்’ஐச் சேர்ந்த ஆறு விளையாட்டாளர்களை மன்றம் தெரிவுசெய்தது.
அந்த மூன்று ஆடவர்களும் ‘சிங்கப்பூர் அன்டர்வாட்டர் ஃபெடரேஷன்’ஐச் சேர்ந்த பயிற்றுவிப்பாளர்கள் என விசாரணையில் தெரியவந்ததாகக் காவல்துறை கூறியது.
கடந்த 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில், அவர்கள் ‘சிங்கப்பூர் அன்டர்வாட்டர் ஃபெடரேஷன்’ஐச் சேர்ந்த விளையாட்டாளர்களின் பொய்யான நீச்சல் போட்டி நேரங்களைச் சமர்ப்பித்ததாக அது தெரிவித்தது.
33, 35, 56 வயது நிரம்பிய அந்த மூவர் மீதும், ஏமாற்றும் நோக்கில் போலி ஆவணங்களைச் சமர்ப்பித்த சந்தேகத்தின்பேரில் குற்றஞ்சாட்டப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
அந்தக் குற்றத்திற்குப் பத்தாண்டுகள்வரை சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.

