2025ஆம் ஆண்டில் தங்கள் நிறுவனங்கள் குற்றவாளிகளால் குறிவைக்கப்படும் என்று இங்குள்ள வர்த்தக மேலாளர்கள் வெளிநாடுகளில் உள்ள தங்கள் சகாக்களை விட அதிகமாக கவலைப்படுகிறார்கள் என்று ஒரு புதிய ஆய்வு குறிப்பிட்டுள்ளது.
ஆய்வில் கலந்துகொண்ட நிர்வாகிகளில் 76 விழுக்காட்டினர், கள்ளப் பணத்தை நல்ல பணமாக்குதல் முதல் பல்வேறு மோசடிகள், லஞ்சம் மற்றும் ஊழல் வரையிலான நிதிக் குற்றங்களில் சிக்கிக் கொள்வதைப் பற்றி கவலைப்படுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இது உலக அளவான 71 விழுக்காட்டை விட சற்று அதிகமாகும்.
உலகளாவிய நிதி மற்றும் இடர் ஆலோசனை தீர்வுகளை வழங்கும் நிறுவனமான க்ரோலின் அறிக்கை, ஆசிய-பசிபிக் வட்டாரத்தில் 82% மூத்த நிர்வாகத்தினர், 2025ஆம் ஆண்டில் அதிக நிதிக் குற்றங்கள் நடைபெறும் என்று எதிர்பார்க்கிறார்கள் என்றும், இது உலகின் மிக உயர்ந்த நிலையானது என்றும் குறிப்பிட்டுள்ளது.
இந்த நிறுவனம் 2024ஆம் ஆண்டின் பிற்பகுதியில் உலகெங்கிலும் உள்ள 600 மூத்த நிர்வாகிகளிடம் தங்கள் நிறுவனங்களில் நிதிக் குற்றத்தின் நிலை குறித்து கருத்துக் கணிப்பு நடத்தியது.
சிங்கப்பூர் கண்டுபிடிப்புகளின்படி, ஆய்வில் பங்கேற்றவர்களின் 68 விழுக்காட்டினர் இணைய பாதுகாப்பு அச்சுறுத்தல்களையும், 61 விழுக்காட்டினர் செயற்கை நுண்ணறிவைப் (ஏஐ) பயன்படுத்தும் குற்றவாளிகளையும், 2025ஆம் ஆண்டில் நிதிக் குற்றங்களைத் தூண்டும் இரண்டு காரணிகளாகக் குறிப்பிட்டதாக எடுத்துக்காட்டுகின்றன.
போலியான படங்கள், காணொளி அல்லது ஒலிப்பதிவை உருவாக்க செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதன் மூலம் மோசடி செய்பவர்கள் ஒழுங்குமுறை அதிகாரிகளுக்கு சவால்களை ஏற்படுத்துவதாக க்ரோல் நிறுவனம் குறிப்பிட்டது.
ஆனால், செயற்கை நுண்ணறிவு முறையாகப் பயன்படுத்தப்பட்டால், அது நிறுவனங்கள் சட்டவிரோத நிதி நடவடிக்கைகளைக் கண்டறிந்து தடுக்க உதவும் என்றும் அது குறிப்பிட்டது.
பதிலளித்தவர்களில் 72 விழுக்காட்டினர், செயற்கை நுண்ணறிவு அவர்களின் நிதி குற்ற இணக்கத் திட்டங்களுக்குப் பயனளிக்கும் என்று நம்புவதாக அறிக்கை கண்டறிந்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
ஆனால், ஏற்கெனவே இந்தக் கருவிகளை ஆராய்ந்து வருபவர்களில் 25 விழுக்காட்டினர் மட்டுமே செயற்கை நுண்ணறிவு போன்ற தொழில்நுட்பத்திலிருந்து ‘மிகவும் நேர்மறையான தாக்கத்தைக்’ காண்கிறார்கள்.
2025ஆம் ஆண்டில் மின்னிலக்க நாணயத்தால் ஏற்படும் அச்சுறுத்தல் மிதமானது முதல் குறிப்பிடத்தக்க அளவு வரை இருந்தது கவலையளித்தது என்று சிங்கப்பூரில் பதிலளித்தவர்களில் 74 விழுக்காட்டினர் கூறியிருந்தனர். இருந்தாலும், 36 விழுக்காட்டினர் மட்டுமே தங்கள் நிறுவனங்கள், பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாகக் கூறியதாக க்ரோல் அறிக்கை கண்டறிந்துள்ளது.

