தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மூன்று எண்ணெய்க் கசிவு சம்பவங்களுக்கு அரசின் நடவடிக்கை எடுக்கும் கால அளவை ஒப்பிடுவதில் பயனில்லை

2 mins read
7024917d-bdd1-493c-9524-540cfd37e3a2
அக்டோபர் 20, 2024 அன்று பிற்பகல் 1 மணியளவில் புக்கோம் தீவுக்கும் புக்கோம் கெச்சிலுக்கும் இடையே ஷெல் நிலம் சார்ந்த குழாயிலிருந்து எண்ணெய் கசிவு ஏற்பட்டிருப்பது குறித்து சிங்கப்பூர் கடல்துறை, துறைமுக ஆணையம் எச்சரித்தது. - படம்: சிங்கப்பூர் கடல்துறை, துறைமுக ஆணையம்

அண்மைய எண்ணெய்க் கசிவு சம்பவங்களை ஒப்பிட்டு பார்ப்பதில் பயனில்லை. காரணம், அவை மூன்றும் வெவ்வேறு விதமான சம்பவங்கள் என்று போக்குவரத்து துணை அமைச்சர் முரளி பிள்ளை நவம்பர் 11ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

ஜூன் 14, அக்டோபர் 20, அக்டோபர் 28 ஆகிய தேதிகளில் நிகழ்ந்த எண்ணெய்க் கசிவு சம்பவங்கள் தொடர்பில் நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். அவர்களுக்கு திரு முரளி பதிலளித்தார்.

சபையின் இரு தரப்பிலிருந்தும் குறைந்தது எட்டு உறுப்பினர்கள் கேள்விகளைத் தாக்கல் செய்திருந்தனர். சம்பவங்களின் அடிப்படைக் காரணங்கள், பதில் நடவடிக்கை மேற்கொள்ள எடுத்துக்கொண்ட கால அளவு, சுற்றுச்சூழல் பாதிப்பு, மீண்டும் இந்நிகழ்வுகளை தவிர்க்கும் நடவடிக்கைகள் ஆகியவை குறித்து அவர்கள் கேட்டிருந்தனர்.

இதற்குப் பதிலளிக்கும் விதமாக, சட்ட துணை அமைச்சருமான திரு முரளி, ஒவ்வொரு சம்பவத்தின் தன்மையும் அளவும் வேறுபட்டது என்றும் ஒவ்வொரு சம்பவத்தின் காரணமும் மற்றவற்றுடன் தொடர்பில்லாதது என்றும் வலியுறுத்தினார்.

ஜூன் 14ஆம் தேதி நிகழ்ந்த எண்ணெய்க் கசிவு, சிங்கப்பூரைச் சுற்றியுள்ள கடற்கரைகள் மூடப்படுவதற்கு காரணமாக இருந்தது. பாசிர் பாஞ்சாங் முனையத்தில் வோக்ஸ் மாக்சிமா எனும் ஒரு தூவார் படகும் மரின் ஹானர் எனும் எண்ணெய்க் கப்பலும் மோதிக்கொண்டன. அதன் காரணமாக 400 டன் எண்ணெய் கசிந்து கடலில் கலந்தது.

சிங்கப்பூர் கடல்துறை, துறைமுக ஆணையம் (எம்பிஏ) தனது விசாரணையை முடித்தது. நெதர்லாந்தின் கொடியேந்திய வோக்ஸ் மாக்சிமாவின் முக்கிய குழு உறுப்பினர்கள் தங்கள் கடமைகளைச் சரியாகச் செய்யத் தவறியதாக மதிப்பிடப்பட்டுள்ளது என்று திரு முரளி கூறினார்.

வணிகக் கப்பல் சட்டம் 1995ன் கீழ் நான்கு பேர் மீதும் நவம்பர் 6ஆம் தேதி அரசு நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

அக்டோபர் 20ஆம் தேதி நடந்த சம்பவம் புக்கோமில் உள்ள ஷெல்லின் நிலக் குழாயில் ஏற்பட்ட கசிவின் விளைவாக, சுமார் 30 முதல் 40 டன் எண்ணெய் மற்றும் தண்ணீரின் கலவை கடலில் கசிந்தது.

அக்டோபர் 28ஆம் தேதி, சாங்கியில் எண்ணெய்க் கப்பலில் எரிபொருள் நிரப்பப்பட்டபோது, 5 டன் எண்ணெய் கடலில் கலந்தது. இது ஜூன் 14 சம்பவத்துடன் ஒப்பிடும்போது “மிகச் சிறிய அளவு” என்று திரு முரளி குறிப்பிட்டார்.

“மூன்று சம்பவங்களின் மிகவும் வேறுபட்ட இயல்புகள், அளவுகள் மற்றும் இருப்பிடங்களைக் கருத்தில் கொண்டு, இந்த மூன்று சம்பவங்களிலிருந்தும் எண்ணெய் பரவுவதைக் கண்காணிக்கவும், சுத்தம் செய்யவும், குறைக்கவும் எடுக்கப்பட்ட நேரம், வளங்கள் வேறுபட்டவையாக இருந்தன.

“எனவே இந்த சம்பவங்களுக்கான பதில் நடவடிக்கை நேரத்தை ஒப்பிடுவது பயனுள்ளதாக இருக்காது,” என்று திரு முரளி கூறினார்.

குறிப்புச் சொற்கள்