சுயதீவிரவாதப் போக்குக்கு ஆளான மூவர் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
தடுத்து வைக்கப்பட்ட மூவரும் சிங்கப்பூரர்கள்.
21 வயது முகம்மது இந்திரா அக்மால் எஃபென்டி, 41 வயது முகம்மது லத்தீஃப் ரஹீம், 44 வயது நூரிஷாம் யூசோஃப் ஆகிய மூவரும் 2024ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தடுத்து வைக்கப்பட்டனர்.
இந்த மூன்று ஆடவர்களும் தனித்தனியே இணையம் மூலம் சுய தீவிரவாதப் போக்குக்கு ஆளானதாகத் தெரிவிக்கப்பட்டது.
வெளிநாடுகளில் ஆயுதம் ஏந்தி வன்முறையில் ஈடுபட தேவையான ஏற்பாடுகளை அவர்கள் செய்திருந்தனர்.
அவர்கள் தொடர்பான வழக்குகள் ஒன்றோடு ஒன்று தொடர்புடையதல்ல.
இஸ்ரேல்-ஹமாஸ் போர் அவர்களது சுய தீவிரவாதப் போக்குக்குக் காரணமாக இருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.
ஹமாஸ் அமைப்பு, அதன் ராணுவப் பிரிவான அல் கசாமுடன் இணைந்து இஸ்ரேலுக்கு எதிராகப் போரிட இந்திராவும் நூரிஷாமும் திட்டமிட்டிருந்தனர்.
தொடர்புடைய செய்திகள்
ஈரானிய ராணுவம், ஹிஸ்புல்லா போன்ற ஈரான் ஆதரவுப் போராளி அமைப்புகளுடன் இணைந்து இஸ்ரேலுக்கு எதிராகப் போரிட லத்தீஃப் திட்டமிருந்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
2024ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கைது செய்யப்பட்டபோது மின்தூக்கித் தொழில்நுட்பராக இந்திரா பணியாற்றிக்கொண்டிருந்தார்.
இஸ்ரேலிய ராணுவம் காஸா மீது நடத்திய தாக்குதல்களில் பாலஸ்தீனர்கள் பலர் மாண்டது தொடர்பான செய்திகளை அவர் இணையம் மூலம் தெரிந்துகொண்டார்.
ஆயுதம் ஏந்திய போராட்டம், போரில் வீர மரணமடைவது ஆகியவை தொடர்பான விவரங்களை அவர் இணையம் மூலம் தெரிந்துகொண்டார்.
பாலஸ்தீனர்கள் படும் கடும் துன்பத்தைப் பார்த்து இஸ்ரேலிய ராணுவம் மீது அவருக்கு வெறுப்பு ஏற்பட்டது.
ஹமாஸ் அமைப்புக்காகப் போரிடும் எண்ணம், ஆசை அவருக்கு ஏற்பட்டது.
காஸாவுக்குச் செல்லும் நோக்கில் அதற்கான பயணப் பாதைகளை இந்திரா இணையம் மூலம் தேடினார்.
காஸா செல்ல தமக்கு உதவக்கூடும் என்று பாலஸ்தீனத்தை மையமாகக் கொண்ட ஒருவரை அவர் அடையாளம் கண்டதாகக் கூறப்படுகிறது.
அதே வேளையில் அவர் போரில் சண்டை போடத் தம்மைத் தயார்ப்படுத்திக்கொண்டார்.
ஏற்கெனவே, தற்காப்புக் கலை பயின்றவரான இந்திரா, சண்டை போடும் ஆற்றலை மேலும் வலுப்படுத்திக்கொள்ள கடுமையாகப் பயிற்சி செய்தார்.
விளையாட்டுத் துப்பாக்கிகளைப் பயன்படுத்தி தோட்டாவைப் பொருத்துவது, சுடுவது ஆகிய பயிற்சிகளில் அவர் நாள்தோறும் ஈடுபட்டார்.
உண்மையான ஆயுதங்களைக் கொண்டு பயிற்சி செய்யும் நோக்கில், இந்தோனீசியாவின் பாத்தாம் தீவில் உள்ள துப்பாக்கி சுடுவதற்கான பயிற்சி நிலையங்களை அவர் இணையம் மூலம் தேடினார்.
சுய தீவிரவாதப் போக்குக்கு ஆளான குற்றத்துக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ள மற்றொரு நபரான லத்தீஃப் கைது செய்யப்பட்டபோது அவர் தாய்லாந்துத் தலைநகர் பேங்காக்கில் பணிபுரிந்துகொண்டிருந்தார்.
அங்கு அவர் மின்னிலக்கச் சந்தைப்படுத்துதல் நிறுவனத்தின் இயக்குநராகப் பதவி வகித்தார்.
2024ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அவர் சிங்கப்பூர் திரும்பியபோது கைது செய்யப்பட்டார்.
உலகம் அழிவது தொடர்பாக இஸ்லாமியச் சமயத்தில் போதிக்கப்படும் கருத்துகளை அவர் 2010ஆ்ம் ஆண்டில் இணையம் மூலம் தெரிந்துகொண்டார்.
அதையடுத்து, அவர் சுய தீவிரவாதப் போக்குக்கு ஆளானார்.
ஆண்டுகள் உருண்டோட, தமது வாழ்நாளிலேயே உலகம் அழியும் என்ற நம்பிக்கை அவரது மனதில் வேரூன்றியது.
எனவே, இஸ்லாமியச் சமயத்தின் ‘பகை’வர்களுக்கு எதிராகப் போரிடுவது தமது கடமை என்று அவர் நம்பினார்.
இப்போருக்கு ஈரானின் உயரிய தலைவர் ஆயத்துல்லா காமெனி தலைமை தாங்குவார் என்று ஷியா முஸ்லிமான லத்தீஃப் நம்பியதுடன், அதற்காக மத்திய கிழக்கிற்குச் சென்று ஈரானிய ராணுவம் அல்லது ஈரான் ஆதரவுப் போராளி அமைப்புகளுடன் சேர்ந்து போரிடத் தயாராக இருந்தார்.
பேங்காக்கில் இருந்தபோது மாதத்துக்கு குறைந்தது நான்கு அல்லது ஐந்து முறை கத்தியைக் கொண்டு தாக்குதல் நடத்த அவர் பயிற்சி மேற்கொண்டதாக அதிகாரிகள் கூறினர்.
சிங்கப்பூருக்கு எதிராகத் தாக்குதல் நடத்த திட்டமிடவில்லை என்று லத்தீஃப் தெரிவித்தார்.
ஆனால் அயத்துல்லா காமெனி உத்தரவிட்டால் அவ்வாறு செய்ய தயாராக இருந்ததை அவர் ஒப்புக்கொண்டார்.
2024ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கைது செய்யப்பட்டபோது நூரிஷாம் பாதுகாவல் அதிகாரியாகப் பணியாற்றிக்கொண்டிருந்தார்.
உலகம் அழிவது தொடர்பாக அவருக்கு ஆர்வம் ஏற்பட்டதை அடுத்து, அதுதொடர்பாக இஸ்லாமியச் சமயப் போதகர்கள் சிலர் கூறும் கருத்துகளை அவர் சமூக ஊடகம் மூலம் தெரிந்துகொண்டார்.
இது அவரைத் தீவிரவாதப் பாதையில் கொண்டு சென்றது.
இஸ்லாமியச் சமயத்துக்காகப் போரிட்டு போர்க்களத்தில் மரணமடைந்தால் மட்டுமே தாம் செய்த பாவங்கள் மன்னிக்கப்பட்டு சொர்க்கத்தில் இடம் கிடைக்கும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை அவருக்கு ஏற்பட்டது.
காஸாவுக்குச் சென்று பாஸ்தீன முஸ்லிம்களைத் தற்காக்க ஆயுதம் ஏந்தி போரிடுவது தமது சமயக் கடமை என்ற எண்ணம் அவருக்கு மேலோங்கியது.
சிங்கப்பூர் ஆயுதப் படையில் தமக்குக் கிடைத்த பயிற்சி இதற்குக் கைகொடுக்கும் என்று அவர் நம்பினார்.
ராணுவப் பயிற்சியின்போது ஆயுதங்களைப் பயன்படுத்த வழங்கப்பட்ட பயிற்சி தமக்கு உதவியாக இருக்கும் என்று நூரிஷாம் எண்ணினார்.
பாத்தாமில் உள்ள துப்பாக்கி சுடுவதற்கான பயிற்சி நிலையங்களுக்குச் சென்று மீண்டும் பயிற்சி செய்ய அவர் திட்டமிட்டார்.
இந்நிலையில், தாங்களாகவே தீவிரவாதப் போக்குக்கு ஆளானதாகவும் சிங்கப்பூரில் உள்ள வேறு யாரும் தங்களை அப்பாதைக்கு இட்டுச் செல்லவில்லை என்றும் மூவரும் தெரிவித்தனர்.
ஆயுதம் ஏந்தி போரிடத் தாங்கள் கொண்டிருந்த திட்டம் சிங்கப்பூரில் உள்ள தங்களது குடும்பத்தாருக்குத் தெரியாது என்று அவர்கள் கூறினர்.
இதற்கிடையே, சிங்கப்பூரின் பாதுகாப்புக்கு மிரட்டலாக மாறக்கூடிய அதிகாரிகளை அடையாளம் காணும் செயல்முறைகளை தேசிய அளவிலும் சிங்கப்பூர் ஆயுதப் படை அளவிலும் நடைமுறைப்படுத்தியுள்ளதாகத் தற்காப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
தேசிய சேவையின்போது கைக்கொள்ளும் திறன்களைத் தேசிய சேவையாளர்கள் பயங்கரவாதத் தாக்குதல்கள் அல்லது குற்றச் செயல்களுக்குப் பயன்படுத்தும் சாத்தியம் இருப்பது கவலை அளிப்பதாக அமைச்சு கூறியது.
அவ்வாறு ஏதேனும் அபாயம் உள்ளதா என்பதை கண்டறிய ராணுவப் பாதுகாப்புத்துறையும் தற்காப்பு அமைச்சும் அடிக்கடி சோதனைகளை நடத்துவதாகத் தெரிவிக்கப்பட்டது.
தேசிய சேவையில் கற்றுக்கொள்பவற்றை குற்றச்செயல்களுக்கு அல்லது பயங்கரவாத தாக்குதல்களுக்குப் பயன்படுத்தக்கூடும் என்று அடையாளம் காணப்படுபவர்களுக்கு ராணுவ, ஆயுதப் பயிற்சிகள் வழங்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டது.
இதுதொடர்பாக மற்ற அரசாங்க அமைப்புகளுடன் ராணுவப் பாதுகாப்புத்துறை இணைந்து செயல்படுகிறது.
ராணுவ வீரர்களிடையே ஒற்றுமை, பரஸ்பர புரிந்துணர்வு, மற்ற பின்னணியைச் சேர்ந்தோரைப் புரிந்துகொள்ளும் தன்மை ஆகியவற்றை வலுப்படுத்துவதில் சிங்கப்பூர் ஆயுதப் படை தீவிரம் காட்டி வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.