58,000 வேப் கருவிகளைப் பதுக்கியதன் தொடர்பில் மூவருக்குச் சிறைத் தண்டனை

58,000 வேப் கருவிகளைப் பதுக்கியதன் தொடர்பில் மூவருக்குச் சிறைத் தண்டனை

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

01 Oct 2026 - 4:48 pm

2 mins read

சிங்கப்பூரில் கிட்டத்தட்ட 58,000 மின்சிகரெட் கருவிகளை இரண்டு இடங்களில் பதுக்கிவைத்திருந்த கும்பலுடன் தொடர்புடைய ஆடவர் மூவருக்கு வியாழக்கிழமை (அக்டோபர் 1) சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அவர்களில் 27 வயது இங் டாய் லுன், 33 வயது ஆட்ரியன் சியா ஹொங் சிங் ஆகிய இருவரும் சிங்கப்பூரில் மின்சிகரெட்டுகளை விநியோகம் செய்பவர்களாகவும் செயல்பட்டனர்.

கும்பலின் உறுப்பினராக இருந்தபோது கிட்டத்தட்ட $100,000 சம்பாதித்த சியாவிற்கு $100,000 அபராதத்துடன் ஓராண்டு, ஐந்து மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

அபராதத்தைச் செலுத்த தவறினால் கூடுதலாக நான்கு மாதங்கள் அவர் சிறையில் இருக்கவேண்டும்.

கும்பலின் உறுப்பினராக இருந்தது, லெண்டோரில் வாடகைக்கு எடுத்த தரைவீடு ஒன்றில் 12,000க்கும் அதிகமான மின்சிகரெட் கருவிகளை வைத்திருந்ததற்கான சதித் திட்டத்தில் ஈடுபட்டது ஆகியவற்றைச் சியா ஒப்புக்கொண்டார்.

கும்பலில் இருந்தபோது $40,000 வரை சம்பாதித்த இங்கிற்கு ஓராண்டு, ஐந்து மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் அவருக்கு $97,600 அபராதமும் விதிக்கப்பட்டது.

மூன்றாவது ஆடவரான 36 வயது டான் யி டான், வட்டாரத்தின் விநியோகிப்பாளராகச் செயல்பட்டார்.

கும்பலில் உறுப்பினராக இருந்தபோது கிட்டத்தட்ட $38,400 சம்பாதித்த டானுக்குப் பத்து மாதச் சிறைத் தண்டனையும் $38,400 அபராதமும் விதிக்கப்பட்டது.

குற்றக் கும்பலில் இருந்ததற்காகச் செப்டம்பர் மாதம் குற்றஞ்சாட்டப்பட்ட ஆறு பேரில் அந்த மூவரும் அடங்குவர்.

29 வயது வோங் ஈ வெய், 30 வயது டிஃப்னி லிம் ஹுய் பெங், 31 வயது கென்னத் டான் ஹொங் சாங் ஆகியோர் கும்பலின் பிற உறுப்பினர்கள்.

கென்னத் டானின் மனைவி லிம். அவர்களின் வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது.

வோங்கும் கென்னத் டானும் குற்றக் கும்பலின் தலைவர்களாக இருந்ததை ஒப்புக்கொண்டனர்.

அவர்கள் ‘நோபடி’ என்று அறியப்படும் நபரிடமிருந்து என்ன செய்யவேண்டும் என்ற அறிவுரைகளைப் பெற்றனர். அந்த நபர் மலேசியாவில் இருப்பதாகச் சந்தேகிக்கப்படுகிறது.

அதன்படி அவர்கள் லெண்டோர் தரைவீட்டிலும் செம்பவாங்கின் கென்பரா வட்டாரத்தில் உள்ள கூட்டுரிமை வீட்டிலும் மின்சிகரெட் கருவிகளைப் பதுக்கிவைத்திருந்தனர்.

குறிப்புச் சொற்கள்
கும்பல்மின்சிகரெட்சிறைஆடவர்