தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

போதைப்பொருள் கடத்தியதாக சந்தேகிக்கப்படும் ஐவர் கைது

2 mins read
e55c409f-cdc0-403f-891a-266626f87fb1
பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள்களின் மதிப்பு கிட்டத்தட்ட $71,000 என மதிப்பிடப்பட்டுள்ளது. - படம்: சிஎன்பி

போதைப்பொருள் கடத்தியதாகச் சந்தேகிக்கப்படும் மூன்று இளையர்கள் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் அனைவரும் 17 வயதுக்கும் 21 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.

மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு புதன்கிழமை நடத்திய தேடுதல் வேட்டையில் அவர்கள் பிடிபட்டனர்.

அவர்கள் டெலிகிராம் உரையாடல் செயலி வாயிலாகப் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

அவர்களிடமிருந்து 204 கிராம் ஐஸ், 143 கிராம் கஞ்சா, 12 எக்ஸ்டசி மாத்திரைகள், 12 கிராம் கெட்டமைன், போதைப்பொருள் நிறைந்த ஒரு புட்டி ஆகியனவும் $3,600 ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டன.

பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள்களின் மதிப்பு கிட்டத்தட்ட $71,000 இருக்கும் எனக் கூறப்பட்டது.

பூன் லே டிரைவில் உள்ள ஒரு குடியிருப்பில் 20 வயது ஆடவரும் 19 வயது மாதும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அதிகாரிகளின் உத்தரவுக்கு இணங்க மறுத்ததால் அதிகாரிகள் கதவை உடைத்துகொண்டு உள்ளே நுழைந்தனர்.

அவர்களிடமிருந்து கிட்டத்தட்ட 83 கிராம் ஐஸ், 48 கிராம் கஞ்சா, 12 கிராம் கெட்டமைன், ஒன்பது எக்ஸ்டசி மாத்திரைகள் முதலிய போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

பூன் லே அவென்யூவில் உள்ள குடியிருப்பில் 18 வயது இளையர் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரது சொகுசு காரிலிருந்து கிட்டத்தட்ட 121 கிராம் ஐஸ், 95 கிராம் கஞ்சா, மூன்று எக்ஸ்டசி மாத்திரைகள், கட்டுப்படுத்தப்பட்ட போதைப்பொருள் அடைக்கப்பட்ட புட்டி, மின்னிலக்க எடைக்கருவி ஆகியன பறிமுதல் செய்யப்பட்டன.

ஜூரோங் வெஸ்ட் ஸ்திரீட் 93இல் இருக்கும் குடியிருப்பில் 21 வயது ஆடவரும் 17 வயது மாதும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து பல ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.

கைது செய்யப்பட்ட அனைவரிடமும் போதைப்பொருள் நடவடிக்கைகள் குறித்து மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்