சிங்கப்பூரில் முதல் முறையாக மூத்தோருக்கு ஒரே இடத்தில் மூன்று விதமான சேவைகள் வழங்கும் நிலையம் திறக்கப்பட்டுள்ளது.
டெக் வாய் விஸ்தாவில் அமைந்துள்ள ரீச்-எஸ்எல்இசி துடிப்பாக மூப்படையும் புதிய நிலையத்தை (Reach-SLEC Active Ageing Centre) வெள்ளிக்கிழமை அன்று (அக்டோபர் 11) துணைப் பிரதமரும் சுவா சூ காங் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான கான் கிம் யோங் அதிகாரபூர்வமாகத் திறந்து வைத்தார்.
‘ரீச்’ சமூக சேவைகள், செயின்ட் லூக்ஸ் முதியோர் பராமரிப்பு ஆகியவற்றுக்கு இடையிலான ஒத்துழைப்பில் புதிய நிலையம் செயல்படுகிறது.
இந்நிலையத்தில் மூத்தோருக்கு பகல் நேர பராமரிப்பு, சமூக மறுவாழ்வு போன்ற கூடுதல் சேவைகள் அருகிலுள்ள வசதிகளில் வழங்கப்படுகின்றன.
ஒருங்கிணைக்கப்பட்ட பராமரிப்புச் சூழலை உருவாக்கும் முயற்சியான சிங்கப்பூரின் ‘நலமாக மூப்படைதல்’ எஸ்ஜி செயல் திட்டத்தையொட்டி அதன் சேவைகள் அமைந்துள்ளன.
ரீச்-எஸ்எல்இசி நிலையத்தில் ஒரே கூரையின்கீழ் மூத்தோருக்கு மூன்று விதமான வழங்கப்படுகின்றன: பகல் நேர பராமரிப்பு, எஸ்எல்இசியின் பகல்நேர மறுவாழ்வு சேவை, ‘ரீச்’ சமூக சேவையில் துடிப்பாக மூப்படையும் நடவடிக்கைகள்.
புதிய நிலையத்தைத் தொடங்கி வைத்துப் பேசிய வர்த்தக, தொழில் அமைச்சருமான திரு கான், உலகில் அதிவேகமாக மூப்படையும் மக்களைக் கொண்ட நாடுகளில் சிங்கப்பூரும் ஒன்று எனக் குறிப்பிட்டார்.
“2030ஆம் ஆண்டுவாக்கில் நான்கில் ஒரு சிங்கப்பூரரின் வயது 65 அல்லது அதற்கு மேற்பட்டிருக்கும். ஏறக்குறைய 83,000 மூத்தோர் தனியாக வசிப்பார்கள்,” என்றார் அவர்.
தொடர்புடைய செய்திகள்
“இதை கருத்தில் கொண்டு இதுபோன்ற துடிப்பாக மூப்படையும் நிலையத்தை அமைக்க நாங்கள் விரும்புகிறோம். அந்த வகையில் உங்களுக்கு நாங்கள் தொடர்ந்து ஆதரவளிக்க முடியும். ஆனால் அரசாங்கம் மட்டுமே இதனை தனியாகச் செய்ய முடியாது.
“நமது சமூக அமைப்புகள் எவ்வாறு இணைந்து பணியாற்ற முடியும் என்பதையும் பார்க்க வேண்டும். நாம் அனைவரும் இணைந்து செயல்பட முடியும் என நம்புகிறேன். அவ்வாறு கைகோத்து செயல்பட்டால் மக்களுக்கு சிறப்பான சேவைகளை வழங்க முடியும்,” என்று திரு கான் கூறினார்.
2024ஆம் ஆண்டு பிப்ரவரியில் மூன்று சேவைகளை வழங்கும் நிலையம் அமைக்கப்பட்டதிலிருந்து ரீச், எஸ்எல்இசி 450 மூத்தோருக்கு சேவையாற்றியிருக்கிறது. முழு ஆற்றலுடன் 1,200 முதியோருக்கு அவற்றால் சேவை வழங்க முடியும்.
‘ரீச்’ தலைமை நிர்வாக அதிகாரியான மைக்கல் லாய், “ஒரே கூரையின்கீழ் மூத்தோருக்கு தங்கு தடையற்ற சேவை வழங்கும் தனித்துவமான பராமரிப்பு மாதிரியை நாங்கள் உருவாக்கியிருக் கிறோம். ‘ரீச்’, ‘எஸ்எல்இசி’ ஆகியவற்றுடன் ஒருங்கிணைந்த நிபுணத்துவத்துடன் எங்கள் மூத்தோருடன் சேர்ந்து, நாங்கள் சுவா சூ காங்கில் அக்கறையுள்ள ஒரு சமூகத்தை உருவாக்குவோம் என்றார்.
எஸ்எல்இசியின் தலைமை நிர்வாக அதிகாரியான டாக்டர் கென்னி டான், ஒருங்கிணைந்த சமூக பராமரிப்பு மாதிரியானது தற்போதுள்ள மாதிரிகளில் இருந்து மாறுபட்டது என்று சுட்டினார்.
துடிப்பாக மூப்படையும் நடவடிக்கைகளில் ‘ரீச்’ நிபுணத்துவம் பெற்றுள்ளது. அதே சமயத்தில் மறதிநோய் பகல்நேர பராமரிப்பு, மறுவாழ்வு சேவை உள்ளிட்ட சேவைகளில் எஸ்எல்இசிக்கு 25 ஆண்டுகள் அனுபவம் உள்ளது.
இரு அமைப்புகளும் கூட்டாக செஞ்சா வேலியில் மூத்தோர் பராமரிப்பு நிலையத்தை நடத்தி வருகின்றன. இது, 2024 ஜூலையில் அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டது.