துவாசில் மூன்று வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதியதில் 12 பேர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
சிற்றுந்து, லாரி, கனரக வாகனம் ஆகிய மூன்றும் மோதிக்கொண்ட அந்தச் சம்பவம் வியாழக்கிழமை (ஜூன் 18) காலை நிகழ்ந்தது.
அது பற்றி காலை 6.50 மணியளவில் தங்களுக்குத் தகவல் கிடைத்ததாகக் காவல்துறையும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் தெரிவித்தன.
துவாஸ் சவுத் பொலிவர்டை நோக்கிச் செல்லும் துவாஸ் சவுத் அவென்யூ 3ல் நிகழ்ந்த அந்த விபத்தில் பாதிக்கப்பட்ட ஆறு பேர் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்கும் மேலும்16 பேர் இங் டெங் ஃபோங் பொது மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.
21க்கும் 53க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த 22 பேரும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது சுயநினைவோடு இருந்ததாகக் காவல்துறை தெரிவித்தது.
விபத்து தொடர்பான காணொளி ஒன்று டிக்டாக் சமூக ஊடகத்தில் பகிரப்பட்டது.
சேதமடைந்த லாரி ஒன்றின் பின்னால் மோதிய நிலையில் சிற்றுந்து நின்றிருந்ததையும் அந்தச் சிற்றுந்தின் முன்பக்கக் கண்ணாடியும் பக்கவாட்டுச் சன்னலும் உடைந்து நொறுங்கியதையும் அந்தக் காணொளியில் காணமுடிந்தது.
அந்த இரு வாகனங்களுக்கும் இடையில் கண்ணாடித் துண்டுகளும் சிதைந்த பாகங்களும் சிதறிக் கிடந்தன.
தொடர்புடைய செய்திகள்
லாரியின் முன்பகுதி ஒரு கனரக வாகனத்தின் பின்பகுதியில் மோதிய நிலையில் அதன் ஓட்டுநருக்கான பக்கவாட்டுக் கதவு சற்றே திறந்திருப்பதும் காணொளியில் தெரிந்தது.
சம்பவ இடத்தில் குறைந்தபட்சம் மூன்று ஆம்புலன்ஸ் வாகனங்களும் ஒரு தீயணைப்பு வாகனமும் காணப்பட்டன.
41 வயது சிற்றுந்து ஓட்டுநர் காவல்துறையின் விசாரணைக்கு உதவி வருகிறார்.

