விதிமீறல் காரணமாக சிங்கப்பூர் பங்குச் சந்தையில் வர்த்தகம் செய்வதிலிருந்து தற்காலிகமாகத் தடைசெய்யப்பட்ட நிறுவனங்கள் தங்களது அடிப்படைப் பிரச்சினைகளை மூன்றாண்டுகளுக்குள் தீர்த்துக்கொள்ள வேண்டும் என பங்குச்சந்தையின் ஒழுங்குமுறைப் பிரிவு (Regco) தெரிவித்துள்ளது.
தற்காலிகத் தடைகளை தேவைப்படும் அளவுக்குக் குறைவாக வைத்திருக்க அந்தப் பிரிவு முயன்றுவரும் சூழலில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
நீண்டகாலத்திற்குத் தற்காலிகத் தடையில் உள்ள நிறுவனங்கள், மூன்று ஆண்டுகளுக்குள் தங்கள் பிரச்சினைகளுக்கு உறுதியான தீர்வை எட்டமுடியும் என்பதை அதன் தரவுகள் தெரிவித்துள்ளன.
அந்த கால அவகாசத்திற்குள் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ளாத நிறுவனங்கள், பங்குச்சந்தைப் பட்டியலிலிருந்து நீக்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதே தற்போதைய நடைமுறை என்பதை ஒழுங்குமுறைப் பிரிவு விளக்கி உள்ளது.

