தேசிய சேவைக் கடமையைத் தவிர்த்தவருக்கு மூவாண்டுச் சிறை

தேசிய சேவைக் கடமையைத் தவிர்த்தவருக்கு மூவாண்டுச் சிறை

2 mins read
8d52fce6-19f5-4df0-8c5b-51eba7f12fb7
தண்டனையை எதிர்த்து யாவ் சி ஹாய் உடனடியாக மேல்முறையீடு செய்துள்ளார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தேசிய சேவை கடமைகளை 21 ஆண்டுகளுக்கும் மேலாகத் தவிர்த்து வந்த 47 வயது எட்மண்ட் யாவ் சி ஹாய்க்கு செவ்வாய்க்கிழமையன்று (மே 26) மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனையும் $3,000 அபராதமும் விதிக்கப்பட்டது.

தண்டனையை எதிர்த்து யாவ் உடனடியாக மேல்முறையீடு செய்துள்ளார். கடந்த 2021ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டபோது யாவுக்கு 40 வயது கடந்துவிட்டதால், அவர் தமது முழுநேரத் தேசிய சேவை மற்றும் அதற்குப் பிந்தைய போர்க்காலத் தயார்நிலை கடமைகள் அனைத்தையும் திட்டமிட்டு தவிர்த்ததாக மாவட்ட நீதிபதி ஜேம்ஸ் எலிஷா லீ தெரிவித்தார்.

முன்னதாக, தேசிய சேவையில் சேரத் தவறிய குற்றத்துக்காக மார்ச் மாதத்திலும் சிங்கப்பூர் குடியுரிமை பெற்றவராக இருந்தபோதிலும் இந்தோனீசியக் கடப்பிதழைப் பயன்படுத்தி 13 முறை சட்டவிரோதமாகப் பயணம் செய்த குற்றங்களுக்காக ஏப்ரல் மாதத்திலும் அவர் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டிருந்தார்.

அதிகாரிகள் தம்மீது எந்த ஒரு ஒழுங்கு அல்லது அமலாக்க நடவடிக்கையும் எடுக்காததால், தம்மை அவர்கள் இந்தோனீசியராகக் கருதினர் என்று யாவ் தரப்பில் வாதிடப்பட்டது.

ஆனால், அவர் தேசிய சேவையில் சேரத் தவறிய ஐந்து நாள்களுக்குள், 1997ஆம் ஆண்டில் காவல்துறை அரசிதழில் அவரது சிங்கப்பூர் அடையாள அட்டைப் பெயர் பதிவு செய்யப்பட்டுத் தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டிருந்தார் என்பதை நீதிபதி சுட்டினார்.

யாவ்வின் இந்தோனீசியக் கடப்பிதழில் வேறு பெயர் இருந்ததால் அவர் பிடிபடாமல் தப்பித்துள்ளார் என்றும் மத்திய ஆள்பலத் தளம் தொடர்ந்து அவரது கடமைகளை அவருக்கு நினைவூட்டியும் அவர் வேண்டுமென்றே அதைப் புறக்கணித்தார் என்றும் நீதிபதி தெரிவித்தார்.

பிடிபடாமல் இருப்பதற்கான சூழலை அவரே உருவாக்கிவிட்டு, இப்போது அமலாக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறுவது ஏற்புடையதல்ல எனக் குறிப்பிட்ட நீதிபதி, அதிகபட்ச தண்டனையான மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனையை விதித்தார்.

குறிப்புச் சொற்கள்