‘வாழ்வது மட்டுமல்ல, செழிக்கவும்’ எனும் தனது தேர்தல் முழக்கவரியை சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி அறிவித்துள்ளது.
தமது கட்சி முன்னெடுத்துப் பேசவுள்ள மூன்று அம்சங்களையும் கட்சியின் தலைமைச் செயலாளர் சீ சூன் ஜுவான் அறிவித்தார்.
சனிக்கிழமை (ஏப்ரல் 19) புக்கிட் பாஞ்சாங்கில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கட்சியின் தலைமைச் செயலாளர் சீ சூன் ஜுவான், செம்பவாங் குழுத்தொகுதி வேட்பாளர்களில் ஒருவரான ஆல்ஃபிரட் டான், தாமன்ஹூரி அபாஸ் உள்ளிட்ட கட்சி உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
வாழ்க்கைச் செலவினக் குறைப்பு, வேலைப் பாதுகாப்பு, மனநலன் ஆதரவு ஆகிய மூன்று முக்கியப் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கவுள்ளதாக டாக்டர் சீ குறிப்பிட்டார்.
விலைவாசி உயர்வு
பொருள், சேவை வரியை 7 அல்லது 5 விழுக்காடாகக் குறைப்பதன் மூலம் அன்றாடச் செலவுகளைக் கணிசமாகக் குறைப்பது, மருத்துவச் செலவுகளைக் குறைக்கும் வழிகளில் கவனம் செலுத்துவது, கட்டணங்களைப் பற்றி கவலைப்படாமல் ஆரோக்கியமாக வாழ வழிவகுப்பது, பொதுச்சந்தை அல்லாத திட்டம் மூலம் தேவைக்கேற்பக் கட்டித் தரப்படும் அடுக்குமாடி வீடுகளின் விலையைக் குறைப்பது ஆகிய வழிகள் மூலம் வாழ்க்கைச் செலவினங்களைக் குறைப்பது குறித்து தனது கட்சி வலியுறுத்தும் என்று டாக்டர் சீ தெரிவித்தார்.
வேலைப் பாதுகாப்பு
சிங்கப்பூரர்களுக்கு வேலைப் பாதுகாப்பையும் பரந்த வாய்ப்புகளையும் உறுதிசெய்யும் நோக்கில், வெளிநாட்டுத் தொழில் வல்லுநர்களின் வருகையைக் குறைத்து, சிங்கப்பூரர்களுக்கு முன்னுரிமை அளிப்பது தனது கட்சியின் முக்கிய நோக்கங்களில் ஒன்று என்றார் அவர்.
மனநலன் ஆதரவு
குறைந்தபட்ச சம்பளச் சட்டத்தை அறிமுகப்படுத்துவதன் மூலம் சிங்கப்பூரர்கள் விலைவாசிக்கேற்ற சம்பளம் பெறுவதை உறுதிசெய்வதும் வாழ்க்கைச் செலவினம் உட்பட பல்வேறு சிரமங்களால் ஏற்படும் மனநலப் பிரச்சினையைக் குறைக்க ஆதரவளித்து, சிங்கப்பூரர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதையும் தனது கட்சி நோக்கமாகக் கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
“சிங்கப்பூர் சுதந்திரமடைந்து 60 ஆண்டுகள் கடந்துள்ளது. அன்றாடப் பொருள் வாங்குவதற்கு பற்றுச்சீட்டுகளைச் சார்ந்திருக்கும் நிலையைக் கடந்து, வாழ்க்கைத்தரம் அடுத்தகட்டத்திற்கு நகர வேண்டும்,” என்று டாக்டர் சீ சொன்னார்.
தொடர்புடைய செய்திகள்
“அதிகரித்துவரும் வாழ்க்கைச் செலவினங்களைச் சமாளிக்க விநியோக ஊழியர்கள், ஓட்டுநர்கள், அலுவலக ஊழியர்கள் என அனைத்துத் தரப்பினரும் ஓடிக்கொண்டே இருக்கின்றனர். வாழ்க்கையைச் சமாளிப்பதைத் தாண்டி, வெற்றியை நோக்கி சிங்கப்பூரர்கள் செல்ல வேண்டும்,” என்றார் அவர்.
“சிங்கப்பூரை வெற்றிப் பாதையில் செலுத்த புத்தாக்கச் சிந்தனைகள் தேவைப்படுகின்றன. மக்கள் செயல் கட்சியில் (மசெக) பல புதுமுகங்கள் இருந்தாலும், அவர்களில் பலர் பொதுச் சேவைத் துறையைச் சேர்ந்தவர்கள் என்பதால், ஒரே குழு மனப்பான்மை இருக்கும். புதிய சிந்தனைகள் வராது என்பது வருத்தமளிக்கும் ஒன்று,” என்று டாக்டர் சீ கருத்துரைத்தார்.
மசெகவின் தேர்தல் அறிக்கை குறித்த கேள்விக்கு, தற்போது தங்கள் கட்சியின் நோக்கங்களையும் கொள்கைகளையும் கடைசி சிங்கப்பூரர் வரை கொண்டுசெல்வதில் கவனம் உள்ளதாகவும் அதற்கு மின்னிலக்க ஊடகம், தொகுதி உலா, பிரசாரங்களைச் சார்ந்துள்ளதாகவும் ஜனநாயகக் கட்சி தெரிவித்தது.
பல தொகுதிகளில் அறிவிக்கப்பட்டுள்ள ஐந்தாண்டு திட்டங்கள் குறித்துப் பேசிய டாக்டர் சீ, “இத்திட்டங்கள் தேவையற்ற செலவினங்களைக் கொண்டுள்ளதா என்பது குறித்த அடிப்படைகள் பற்றி சிந்திக்க வேண்டும்,” என்றார்.