தாய்லாந்தின் ஆகப் பெரிய விருந்தோம்பல் நிறுவனமாகத் திகழும் மைனர் இண்டர்நேஷனல் (Minor International) சிங்கப்பூர் பங்குச் சந்தையில் இடம்பெற நடவடிக்கை எடுத்துவருகிறது.
இந்த ஆண்டு இறுதிக்குள் சிங்கப்பூர் பங்குச் சந்தையில் இடம்பெற்று பங்குகளை விற்பதன்மூலம் அந்த நிறுவனம் மேலும் பல சொகுசு சொத்துகளை உருவாக்க நிதி கிடைக்கும் என்று நம்புகிறது.
தனது 14 ஹோட்டல்களை முன்மொழிந்து பங்குச் சந்தைக்குள் மைனர் இண்டர்நேஷனல் நுழைகிறது. 14 ஹோட்டல்களில் 12 ஐரோப்பாவிலும் இரண்டு தாய்லாந்திலும் உள்ளன. அவற்றின் மதிப்பு 1 பில்லியன் அமெரிக்க டாலராக குறிப்பிடப்பட்டுள்ளது.
மைனர் இண்டர்நேஷனலின் கீழ் 600க்கும் மேற்பட்ட ஹோட்டல்கள் செயல்படுகின்றன. சிங்கப்பூரில் அந்நிறுவனம் தஞ்சோங் பகாரில் பெரிய ஹோட்டலை கட்டி வருகிறது. அது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் திறக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
மைனர் இண்டர்நேஷனலின் கீழ் 2,700 உணவகங்களும் உள்ளன. அவற்றின் மதிப்பு கிட்டத்தட்ட 5 பில்லியன் வெள்ளி ஆகும்.
உணவகங்கள் சொத்தை வைத்து அந்நிறுவனம் ஹாங்காங் பங்குச் சந்தையில் இடம்பெறவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

