ஜூன் மாத முற்பாதியில் இடியுடன் கூடிய மழை, புழுக்கமான இரவுகள் எதிர்பார்க்கப்படுகிறது

ஜூன் மாத முற்பாதியில் இடியுடன் கூடிய மழை, புழுக்கமான இரவுகள் எதிர்பார்க்கப்படுகிறது

2 mins read
20ed250b-564a-4463-b55f-c57770a6312a
ஜூன் மாதத்தின் முற்பாதியில் சிங்கப்பூரில் உள்ள பல இடங்களில் விடியற்காலையிலும் காலை நேரத்திலும் இடியுடன் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆய்வு மையம் செவ்வாய்க்கிழமையன்று (ஜூன் 2) தெரிவித்தது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஜூன் மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் சிங்கப்பூரின் சில பகுதிகளில் காலையிலும் பிற்பகலிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதே வேளையில், வெயிலின் தாக்கம் அதிகரித்து, வெப்பநிலை 33 டிகிரி செல்சியசைத் தாண்டக்கூடும் முன்னுரைக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாது, ஜூன் மாதத்தின் முற்பாதியில் சிங்கப்பூரில் உள்ள பல இடங்களில் விடியற்காலையிலும் காலை நேரத்திலும் இடியுடன் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆய்வு மையம் செவ்வாய்க்கிழமையன்று (ஜூன் 2) தெரிவித்தது.

இதற்கு ‘சுமத்ரா ஸ்குவால்ஸ்’ எனப்படும் இந்தோனீசியாவில் அல்லது மலாக்கா நீரிணைக்கு மேல் உருவாகி கிழக்கு திசை நோக்கி சிங்கப்பூர் வந்தடையும் கனமழை, பலத்த காற்று காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூருக்கு தென்கிழக்கு அல்லது தென்மேற்குத் திசையிலிருந்து பலத்த காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியது. வழக்கமாக செப்டம்பர் மாதம் வரை நீடிக்கும் இந்தத் தென்மேற்குப் பருவமழைக் காலம், ஆண்டின் மற்ற காலங்களைவிடக் குறைந்த மழையளவைக் கொண்ட வறண்ட காலமாகக் கருதப்படுகிறது. இதனால், ஜூன் மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வழக்கமான சராசரியை விடக் குறைவான மழையே பதிவாக வாய்ப்புள்ளது.

இக்காலகட்டத்தில் அன்றாட அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியசிலிருந்து 34 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகக்கூடும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது. சில நாள்களில் வானில் மேகங்கள் குறைவாக இருக்கும்போது அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியசாகப் பதிவாகக்கூடும் என்று கூறப்படுகிறது.

ஜூன் மாதத்தின் முற்பாதியில் இரவுநேர வெப்பநிலை 28 டிகிரி செல்சியசுக்கும் அதிகமாக தொடரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக பல இரவுகள் மிகவும் புழுக்கமாகவும் ஈரப்பதம் மிக்கதாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்