சிங்கப்பூரின் சில பகுதிகளில் இம்மாத (ஏப்ரல்) முற்பாதியில் பெரும்பாலான நாள்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெரும்பாலான நாள்களின் பிற்பகல் வேளைகளில் கனத்த மழை பெய்யும் என முன்னுரைக்கப்பட்டுள்ள நிலையில் சில நாள்களில் மாலை வரை கனமழை நீடிக்கக்கூடும் என்று வானிலை ஆய்வகம் தெரிவித்துள்ளது. புதன்கிழமை (ஏப்ரல் 1) அது அவ்வாறு கூறியது.
ஓரிரு நாள்களில் காலை வேளையில் இடியுடன் கூடிய மழை பரவலாகப் பெய்யும்போது பலத்த காற்றும் வீசக்கூடும்.
ஏப்ரல் மாத முற்பாதியில் வெப்பநிலை பெரும்பாலும் 33 டிகிரி செல்சியசுக்கும் 35 டிகிரி செல்சியசுக்கும் இடைப்பட்டிருக்கும். சில நாள்கள் மட்டும் அது 35 டிகிரி செல்சியசைத் தாண்டக்கூடும்.
இந்தக் காலகட்டத்தில் மழைப்பொழிவு, சிங்கப்பூரின் பெரும்பாலான பகுதிகளில் கிட்டத்தட்ட சராசரி அளவில் பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மார்ச் 17ஆம் தேதி துவாஸ் சவுத் பகுதியிலும் 18ஆம் தேதி லிம் சூ காங் பகுதியிலும் மொத்த மழைப்பொழிவு 58.4 மில்லிமீட்டராகப் பதிவானது. மார்ச் மாதப் பிற்பாதியில் பதிவான ஆக அதிக அளவு அது. மார்ச் 30ஆம் தேதி செம்பவாங்கில் வெப்பநிலை ஆக அதிகமாக 35.4 டிகிரி செல்சியசாகப் பதிவானது.

