ஜூலை முதல்பாதியில் இடியுடன் கூடிய மழையை எதிர்பார்க்கலாம்

ஜூலை முதல்பாதியில் இடியுடன் கூடிய மழையை எதிர்பார்க்கலாம்

1 mins read
e56e6864-3c82-4ffe-a2ff-0ca1ad800b2c
ஜூலை மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில், பல நாள்களுக்குச் சிங்கப்பூரின் சில பகுதிகளில் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரின் சில பகுதிகளில் ஜூலை மாதத்தின் முதல் பாதியில், சில நாள்களுக்கு இடியுடன் கூடிய குறுகிய கால மழை பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும், அதன் பிறகு வறண்ட வானிலை நிலவக்கூடும்.

சிங்கப்பூர் வானிலை ஆய்வு நிலையம் புதன்கிழமை (ஜூலை 1) வெளியிட்ட வானிலை அறிக்கையில், இம்மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில், காலை பிற்பகுதியிலும் பிற்பகல் வேளையிலும் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டது.

இருப்பினும், இந்த மாதத்தின் இரண்டாவது வாரத்தில் சில நாள்களில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அவ்வப்போது பலத்த காற்று வீசக்கூடும் என்றும் முன்னுரைக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரிலும் அதைச் சுற்றியுள்ள வட்டாரங்களிலும் தென்மேற்குப் பருவமழைக் காலம் நிலவக்கூடும் என்றும் காற்று முக்கியமாகத் தென்கிழக்கு அல்லது தென்மேற்குத் திசையிலிருந்து வீசக்கூடும் என்றும் வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்தது.

அதோடு, ஓரிரு நாள்களில் விடியற்காலையிலும் அதிகாலையிலும், சுமத்ரா சூறாவளி காரணமாகப் பரவலாக இடியுடன் கூடிய மழையும் பலத்த காற்றும் வீசக்கூடும்.

ஜூலை மாதத்தின் முதல் இரண்டு வாரங்களுக்கான ஒட்டுமொத்த மழையளவு, தீவின் பெரும்பாலான பகுதிகளில் சராசரியைவிட குறைவாகவே இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலான நாள்களில், அன்றாட அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியசுக்கும் 34 டிகிரி செல்சியசுக்கும் இடைப்பட்டிருக்கும் சாத்தியம் உள்ளதாகவும் முன்னுரைக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்
வானிலைசிங்கப்பூர்மழை