தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தெங்கா விலங்குக் காப்பகங்களில் உண்ணிகள் பெருக்கம்

2 mins read
b1f0d90e-93aa-4287-883f-cdb810a0ba12
செல்லப் பிராணி வளர்ப்புக் கூடத்தின் கதவில் காணப்பட்ட உண்ணிகள். - படம்: ரிக்கி இயோ
multi-img1 of 2

தெங்கா வட்டாரத்தில் உள்ள விலங்குநல நிலையமான ‘த அனிமல் லாட்ஜ்’ தன்வசம் உள்ள விலங்குகள் சிலவற்றின் மீது உண்ணிகள் காணப்படுவதாகக் கவலை தெரிவித்ததாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் அறிந்தது.

அது குறித்து அந்த செய்தித்தாள் தேசிய பூங்காக் கழகத்திடம் வினவியது. உண்ணிகள் உருவாவதற்கு வெப்பநிலையும் ஈரமான வானிலையும் அண்மையில் மாறிமாறி ஏற்பட்டது ஒரு காரணமாக இருக்கலாம் என்று கழகம் பதிலளித்தது.

பாதிக்கப்பட்ட விலங்குநல நிலையத்திடம் விலங்குக் காப்பகம் உள்ளிட்ட விலங்குகள் தொடர்பான 40க்கும் மேற்பட்ட பராமரிப்புக் கூடாரங்கள் உள்ளன. செல்லப் பிராணிகளை வளர்க்கும் வர்த்தகமும் அங்கு நடைபெறுகிறது.

முன்னைய வேளாண் உணவு, கால்நடை ஆணையம் கடந்த 2017ஆம் ஆண்டு ‘த அனிமல் லாட்ஜ்’ வசிப்பிடத்தைக் கட்டியது. லோயாங், சிலேத்தார் மற்றும் லிம் சூ காங்கில்  உள்ள விலங்கு தொடர்பான அமைப்புக் கூடங்களின் குத்தகை முடிவுக்கு வந்ததையொட்டி அது உருவாக்கப்பட்டது.

தற்போது அதனை தேசிய பூங்காக் கழகத்தின் விலங்கு, கால்நடைச் சேவைப் பிரிவு நிர்வகித்து வருகிறது.

ஜூலை தொடக்கம் முதல் உண்ணிகள் பெருகியதை தங்களது அலுவலர்களும் தொண்டூழியர்களும் கவனித்ததாக இரு விலங்குக் காப்பகங்கள் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறின.

சிங்கப்பூர் நாய் பராமரிப்பு அமைப்பு ஒன்றின் தலைவரான ரிக்கி இயோ என்பவர், அண்மைய உண்ணிப் பெருக்கம் வழக்கத்தைவிட அதிகமாக இருந்ததாகக் குறிப்பிட்டார்.

தம் வசமுள்ள 80 நாய்களில் நான்கின்மீது உண்ணிகள் இருந்ததைக் கடந்த இரு வாரயிறுதிகளில் தொண்டூழியர்கள் கண்டு தெரிவித்ததாக அவர் கூறினார். இதற்கு முன்னர் இதுபோல உருவான உண்ணிப் பிரச்சினை சில நாள்களிலேயே முடிவுக்கு வந்தது. தற்போதைய பிரச்சினை முடிவின்றி நீடிப்பதாக திரு இயோ தெரிவித்தார்.

இது தமது காப்பகத்தைக் கடுமையான தொற்று தாக்கத் தொடங்கி இருப்பதன் அறிகுறியாக இருக்கலாம் என்றார் அவர். அவரது நாய் பராமரிப்பு நிலையம் கடந்த 2022ஆம் ஆண்டு முதல் ‘த அனிமல் லாட்ஜ்’ வசிப்பிடத்தில் உள்ளது.

“சொற்ப எண்ணிக்கையில் உண்ணிகள் இருப்பதால் பீதியடையாமல் பொருத்திருந்தோம். ஆனால், செல்லப் பிராணி வளர்ப்பு நிலையக் கதவுகளிலும் உண்ணிகள் காணப்பட்டதாக எனது ஊழியர்கள் கூறியதும், வழக்கத்திற்கு மாறாக ஏதோ நடக்கிறது என்பதை உணர்ந்தோம்,” என்றார் திரு டியோ.

அவரைப் போலவே சிஏஎஸ் (CAS) என்னும் விலங்குக் காப்பகத் தொண்டூழியரான மார்க்கஸ் டானும் தெரிவித்துள்ளார்.

“உண்ணிகள் மனிதர்களை பாதிக்கும் செயல் இதுவரை இங்கு நிகழ்ந்ததில்லை. ஆனால், நான்கு வாரங்களுக்கு முன்னர் தொண்டூழியர்களின் உடலிலும் ஆடைகளிலும் அவற்றைக் கண்டோம். அதன் பின்னர் உடலில் அரிப்பு ஏற்படுவதைப் போல உணர்ந்தோம். அத்துடன், அதிகமான உண்ணிகளையும் கண்டோம்,” என்றார் திரு டான்.

உண்ணி என்பது ரத்தத்தை உறிஞ்சி வாழும் ஒரு மிகச்சிறிய உயிரினம்.

குறிப்புச் சொற்கள்