லேடி காகா இசை நிகழ்ச்சிக்கான நுழைவுச் சீட்டுகள்; மோசடிகளில் சிக்காதீர்!

2 mins read
89a540b5-ecf5-454c-bdf8-30ac9fb7d976
சிங்கப்பூரில் விரைவில் லேடி காகாவின் இசை நிகழ்ச்சி நடக்கிறது. - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

சிங்கப்பூரில் நடத்தப்படவிருக்கும் பிரபல பாப் பாடகி லேடி காகாவின் இசை நிகழ்ச்சிக்கான நுழைவுச் சீட்டுகள் பரபரப்பாக விற்பனையாகிக் கொண்டிருக்கிருக்கின்றன. இந்த நிலையில் நுழைவுச் சீட்டுகளுக்காக மோசடி வலைகளில் சிக்கிக் கொள்ளாதீர்கள் எனக் காவல்துறை எச்சரித்துள்ளது.

மூன்று அங்கீகரிக்கப்பட்ட தளங்களில் மட்டுமே அதற்கான நுழைவுச் சீட்டுகளை வாங்கலாம் என்று அது மார்ச் 21ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் அறிவுறுத்தியது.

சமூக ஊடகங்கள் மற்றும் தகவல் பரிமாற்ற செயலிகளான ஃபேஸ்புக் மார்க்கெட்பிளேஸ், டெலிகிராம், எக்ஸ், கேரோசல், ஸியாஹோங்ஷு உள்ளிட்ட தளங்களில் நுழைவுச் சீட்டுகள் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும் என்று காவல்துறை மேலும் தெரிவித்தது.

டிக்கெட்மாஸ்டர் (Ticketmaster), க்லூக் (Klook), கிறிஸ்ஃபிளையர் (KrisFlyer) ஆகிய மூன்று தளங்கள் லேடி காகாவின் இசை நிகழ்ச்சிக்கான நுழைவுச் சீட்டுகளை விற்க அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

கடந்த 2024ஆம் ஆண்டில் நடைபெற்ற டெய்லர் ஸ்விஃப்ட் இசை நிகழ்ச்சி தொடர்பில் குறைந்தது 1,050 மோசடி புகார்கள் பதிவாகியதாகவும் இதன் மூலம் குறைந்தது $658,000 இழப்பு ஏற்பட்டதாகவும் காவல்துறை குறிப்பிட்டது.

இதுபோன்ற நுழைவுச்சீட்டு மோசடிகளில் பொதுவாக, தகவல் செயலி மற்றும் சமூக ஊடகத் தளங்களில் வெளியிடப்படும் விளம்பரங்களில் ரசிகர்கள் சிக்கி பணத்தை இழக்கின்றனர்.

ரசிகர்களை நம்ப வைப்பதற்காக சில சம்பவங்களில் உண்மையானது போன்றே போலி நுழைவுச் சீட்டுகளின் காணொளி அல்லது படங்கள் காட்டப்படுவதாகவும் காவல்துறை கூறியது.

லேடி காகா, மே மாதம் 18, 19, 21 மற்றும் 24 தேதிகளில் சிங்கப்பூர் விளையாட்டு நடுவத்தில் இசை நிகழ்ச்சியைப் படைக்கவிருக்கிறார். இது, ஆசியாவில் நடைபெறும் அவரது ஒரே இசை நிகழ்ச்சியாகும்.

குறிப்புச் சொற்கள்