வேலைச் சந்தையில் நீடித்த இறுக்கம்

2 mins read
கல்வி, தொழில்நுட்பம், நிதித்துறையில் நிபுணர்களுக்கான தேவை அதிகரிப்பு
9dba7d86-36d3-46ff-a044-b197ae4aa20c
கற்பிப்பு, மென்பொருள் மேம்பாடு, சந்தைப்படுத்துதல், விற்பனை முதலிய துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர்களுக்கு அதிகத் தேவை நிலவியது. - கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரின் வேலைச் சந்தை 2024ஆம் ஆண்டில் தொடர்ந்து இறுக்கமாக இருந்தது.

காலிப் பணியிடங்களில் கிட்டத்தட்ட பாதி, புதிதாக உருவாக்கப்பட்ட வேலைகள் என்று மனிதவள அமைச்சு தனது வருடாந்தர வேலை காலியிட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

கற்பிப்பு, மென்பொருள் மேம்பாடு, சந்தைப்படுத்துதல், விற்பனை முதலிய துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர்களுக்கு அதிகத் தேவை நிலவியது.

ஒட்டுமொத்தமாக, வேலை தேடும் ஒவ்வொரு 100 பேருக்கு 164 காலியிடங்கள் இருந்தன.

காலியிடங்களுக்கான எண்ணிக்கை, டிசம்பர் 2023ல் 176 ஆக இருந்தது.

2024ல் பதிவான காலியிடங்களில் 45.7 விழுக்காடு, புதிதாக உருவாக்கப்பட்ட வேலைகளைக் குறிக்கிறது.

இது, 2023ல் இருந்த 47.3 விழுக்காட்டைக் காட்டிலும் சற்று குறைவு.

இருந்தபோதும், புதிதாக உருவாக்கப்பட்ட வேலைகளுக்கான காலியிடங்கள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளதாக மனிதவள அமைச்சு, மார்ச் 28ஆம் தேதியின்போது வெளியிட்ட செய்தியாளர் அறிக்கையில் குறிப்பிட்டது.

தகவல், தொழில்நுட்பத் துறையிலுள்ள வேலைக்கான காலியிடங்களில் 75 விழுக்காட்டு வேலைகள், 2024ல் புத்தம் புதிதாக உருவாக்கப்பட்டவை.

இது, அந்தத் துறையின் துடிப்பையும் போட்டித்தன்மையையும் வெளிப்படுவதாக உள்ளது.

இருந்தபோதும், சில்லறை வர்த்தகத்திலும் உணவு, பான சேவையிலும் புதிய வேலைகளுக்கான விகிதம் 2023ல் சற்று உயர்ந்த பிறகு குறைந்தது.

இவ்விரு துறைகளின் வர்த்தக வளர்ச்சியின் மெதுவடைதலை அவ்விகிதம் எடுத்துக்காட்டுகிறது.

சிங்கப்பூரில் வசிப்பவர்கள், வெளிநாடுகளில் தங்களது செலவுகளை அதிகரிப்பதால் இந்நிலை ஏற்பட்டுள்ளதும் ஒரு காரணம் என்று மனிதவள அமைச்சின் அறிக்கை குறிப்பிடுகிறது.

2014ல் பதிவான காலியான வேலையிடங்களில் 43.4 விழுக்காடு, நிபுணர்கள், மேலாளர்கள், நிர்வாகிகள், தொழில்நுட்பர்கள் (பிஎம்இடி) ஆகியோருக்கான வேலைகளாக இருந்தன.

பத்தாண்டுகளுக்குப் பிறகு, சிங்கப்பூரின் ஊழியரணி கூடுதல் கல்வித்தகுதியை அடைந்த நிலையில் இந்த விகிதம் 57.7ஐ எட்டியுள்ளது.

தகவல் தொழில்நுட்பம், நிதி மற்றும் காப்புரிமைச் சேவைகள், நிபுணத்துவச் சேவைகள் ஆகியவற்றிலுள்ள ‘பிஎம்இடி’ வேலைகளுக்கான தேவை அதிகமாகி இருப்பதாக மனிதவள அமைச்சு குறிப்பிட்டது.

2014க்கும் 2024க்கும் இடையே, சிங்கப்பூரில் வசிக்கும் பிஎம்இடி பணியாளர்களின் எண்ணிக்கை 227,500 கூடியது.

எம்பிளாய்மன்ட் பாஸ், எஸ் பாஸ் அட்டைதாரர்களின் எண்ணிக்கை 22,100 கூடியது.

வளர்ந்துவரும் துறைகளில் வேலையில் இருக்கும் உள்ளூர் பிஎம்இடி பணியாளர்களின் எண்ணிக்கையும் வெளிநாட்டுப் பணியாளர்களின் எண்ணிக்கையும் ஒன்றோடு ஒன்று சரிக்குச் சரியாக ஏறிக்கொண்டிருப்பதாக மனிதவள அமைச்சர் டான் சீ லெங், செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை (மார்ச் 28) தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்