திருத்த வழிகாட்டிகளைப் பின்பற்றாத டிக்டாக் பயனாளருக்கு பொஃப்மா எச்சரிக்கை

2 mins read
8de527e6-4a48-47b3-bf8c-a194c56aff05
அந்த நபர் 2023 ஜூலை, ஆகஸ்ட் மாதங்களுக்கு இடையில் டிக்டாக்கில் பொய்த் தகவல்களைக் கொண்ட நான்கு காணொளிகளை வெளியிட்டார். - படம்: சாவ் பாவ்

தேர்தலில் வாக்களிக்கும் ரகசியம், மத்திய சேமநிதிக் கொள்கைகள், கட்டுப்படியாகக்கூடிய வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) வீடுகள் ஆகியவை பற்றிய பொய்யான காணொளிகளை ஒரு டிக்டாக் பயனர் வெளியிட்டார்.

அதற்காக அவருக்கு இரண்டு ஆண்டு நிபந்தனை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்று பொஃப்மா எனும் இணையவழி பொய்ச் செய்திக்கும் சூழ்ச்சித் திறத்திற்கும் எதிரான பாதுகாப்புச் சட்ட அலுவலகம் ஜூலை 31ஆம் தேதி தெரிவித்தது.

டாக்டர் இஷாக் ஜே எனும் இணையப் பெயரைக் கொண்ட அந்த 58 வயது நபருக்கு கடந்த 2023 ஆகஸ்ட் மாதம் மூன்று திருத்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.

அதன்படி அவர், தனது இணையப் பதிவுகளில் உண்மை இல்லை என்று தெரிவிப்பதுடன் உண்மையான தகவல்களைத் தெரிவிக்கும் அரசாங்கத்தின் விளக்கத்துக்கான இணைப்புகளையும் அதில் தெரிவிக்க வேண்டும்.

அவ்வாறு செய்வதன் மூலம், ஒருவர் பதிவேற்றம் செய்த பொய்த் தகவலையும் உண்மையான தகவலையும் பொதுமக்கள் சரிபார்க்க வழி வகுக்கும் என்று பொஃப்மா அலுவலகம் விளக்கியது.

இருப்பினும், டாக்டர் இஷாக் ஜே அதற்கு முழுமையாக இணங்கத் தவறிவிட்டார்.

நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் தேவையான அறிவிப்புகளை அவர் பதிவேற்றம் செய்யவில்லை.

அவர் தனது டிக்டாக் கணக்கின் இணைப்பையும் மாற்றினார்.

இதன் காரணமாக, அவரது தளத்தில் உள்ள அறிவிப்புகளை மற்றவர்கள் பார்க்க முடியாமல் போனது என்று பொஃப்மா அலுவலகம் மேலும் கூறியது.

dr.ishhaq.jay என்று இருந்த அவரது டிக்டாக் இணைப்பு இப்போது jay.ishhaq.rajoo என்று மாற்றப்பட்டுள்ளது. தனக்கு நிபந்தனை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்று அவர் ஜூலை 31ஆம் தேதி டிக்டாக்கில் ஒரு காணொளியைப் பதிவேற்றம் செய்தார்.

இந்த ஈராண்டு காலகட்டத்தில் அவர் மீண்டும் குற்றம் செய்தால், அவரது முன்னைய குற்றத்திற்காக அவர் மீது வழக்குத் தொடரப்படலாம்.

குறிப்புச் சொற்கள்