மருத்துவத் துறையில் நேரம் சேமிக்கும் ஏஐ

2 mins read
4c71fc66-35bb-4435-95a8-dad960b4e78a
ஏடிஎக்ஸ் 2025ல் எஸ்டி இஞ்சினியரிங் நிறுவனமும் எனிக்மா ஹெல்த் நிறுவனமும் துணை அமைச்சர் ரஹாயு மஹ்ஸாம் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. - படம்: தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு

மருத்துவத் துறையில் நிர்வாக வேலைகளுக்கான நேரத்தையும் மனித உழைப்பையும் குறைக்கிறது எனிக்மா எனும் செயற்கை நுண்ணறிவுத் தளம்.

எடுத்துக்காட்டாக, சிங்கப்பூர் தேசியக் கண் நிலையத்தில் சுகாதாரப் பராமரிப்புச் சேவை நடைமுறைத் தணிக்கை (Clinical Audit) நேரத்தை எனிக்மா குறைத்துள்ளது.

2024ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை அந்நிலையம் மேற்கொண்ட 7,000க்கும் மேற்பட்ட கண்புரை அறுவை சிகிச்சைகளின் 1.2 மில்லியன் தரவுப் புள்ளிகளை எனிக்மா ஏழே மணி நேரத்தில் ஆராய்ந்தது. வழக்கமான நடைமுறைக்கு 528 மணி நேரம் தேவைப்பட்டிருக்கும்.

எனிக்மாவின் மற்றொரு முக்கியப் பயன்பாடு, மருத்துவ அறிக்கைகளிலிருந்து தரவுகளைப் பிரித்தெடுப்பதாகும். இதன்வழி, ஒரு மணி நேரத்தில் 1,400க்கும் மேற்பட்ட அறிக்கைகளை ஒழுங்குபடுத்த முடிகிறது.

நோயாளியின் தரவுகளை கட்டமைப்பினுள் இருந்தபடியே எனிக்மா பாதுகாப்பாகக் கையாள்கிறது.

இவற்றின்வழி, நோயாளிப் பராமரிப்புக்கு மருத்துவத் துறையினரால் கூடுதல் நேரம் ஒதுக்கமுடிகிறது.

எனிக்மாவின் உருவாக்கத்தைத் தொடர்ந்து, அதற்கென ‘எனிக்மா ஹெல்த்’ எனும் தனி நிறுவனத்தை அமைத்துள்ளது சிங்ஹெல்த் டியூக்-என்யுஎஸ் கல்வி மருத்துவ நிலையம்.

ஏடிஎக்ஸ் 2025ல் மே 27ஆம் தேதியன்று தகவல், மின்னிலக்க மேம்பாட்டு, சுகாதாரத் துணை அமைச்சர் ரஹாயு மஹ்ஸாம் முன்னிலையில் எஸ்டி இஞ்சினியரிங், மருந்துத் தயாரிப்பு நிறுவனமான ரோச் ஆகியவற்றுடன் இரு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது எனிக்மா ஹெல்த்.

துணை அமைச்சர் ரஹாயு மஹ்ஸாம், சிங்கப்பூருக்கான சுவிட்சர்லாந்துத் தூதர் ஃப்ராங் குருட்டர் (வலம்) ஆகியோரின் முன்னிலையில் உலகின் ஐந்தாவது பெரிய மருந்துத் தயாரிப்பு நிறுவனமான ரோச் உடன் எனிக்மா ஹெல்த் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
துணை அமைச்சர் ரஹாயு மஹ்ஸாம், சிங்கப்பூருக்கான சுவிட்சர்லாந்துத் தூதர் ஃப்ராங் குருட்டர் (வலம்) ஆகியோரின் முன்னிலையில் உலகின் ஐந்தாவது பெரிய மருந்துத் தயாரிப்பு நிறுவனமான ரோச் உடன் எனிக்மா ஹெல்த் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. - படம்: தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு

ரோச் நிறுவனத்துடன் கையெழுத்தான முதல் ஒப்பந்தம், மருத்துவச் சோதனைகளுக்கான ஆட்சேர்ப்பை விரைவுபடுத்தும்; சந்தைகளுக்கான அணுகலையும் மேம்படுத்தும்.

எஸ்டி இஞ்சினியரிங் நிறுவனத்துடன் கையெழுத்தான இரண்டாவது ஒப்பந்தம், எஸ்டி இஞ்சினியரிங்கின் மருத்துவமனைத் தரவு நிர்வாகத்தையும் சிங்ஹெல்த்தின் மருத்துவ நிபுணத்துவத்தையும் இணைக்கும்.

திருவாட்டி மஹ்ஸாம் தமது நிறைவுரையில், மருத்துவப் புகைப்படங்களை ஆராயும் ELVF-FM தளம், குறைந்த தரவுகளுடன் பயிற்சிபெறும் MerMed-FM தளம் ஆகிய இரு சிங்ஹெல்த்-ஏஸ்டார் இணைமுயற்சிகளைப் பற்றியும் பேசினார்.

இதைத் தொடர்ந்து, எனிக்மாவை சிங்ஹெல்த் முழுவதும் விரிவாக்கவும் தென்கிழக்காசியாவில் மருந்துத் தயாரிப்பு நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

குறிப்புச் சொற்கள்