தியோங் பாரு சந்தைக்கு அருகே கூரையுடன் கூடிய இணைப்புப்பாதை 2023ஆம் ஆண்டு இறுதிக்குள் அமைக்கப்படும் எனப் போக்குவரத்து, நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற மூத்த துணை அமைச்சர் ஏமி கோர் திங்கட்கிழமை தெரிவித்தார்.
ஹவ்லாக் பெருவிரைவு ரயில் நிலையத்திற்கு எளிதாகச் செல்வதற்கு இது வழிவகுக்கும் என்றும் இதன்மூலம் தாம்சன் - ஈஸ்ட் கோஸ்ட் ரயில் சேவையைப் பயன்படுத்தும்படி அதிகமானோரை ஊக்குவிக்க முடியும் என்றும் டாக்டர் ஏமி கோர் கூறினார்.
மேலும், இந்த இணைப்புப் பாதை அமைக்கும் பணியும் சாலையைப் பாதசாரிகளுக்கு ஏற்ற வகையில் மறுசீரமைப்பு செய்யும் பணியும் தியோங் பாரு பகுதிக்கானத் திட்டமிடப்பட்ட கூடுதல் மேம்பாட்டுப் பணிகள் எனவும் இதில் சாலையை மறுசீரமைப்பு செய்யும் பணிகள் நிறைவடைந்து விட்டன எனவும் டாக்டர் கோர் சொன்னார்.
கம்போங், அட்மிரல்டி வட்டாரங்களில் இதேபோன்ற பணிகள் நிறைவடைந்துவிட்டன என்றும் அங்கு உட்லண்ட்ஸ் ரிங் ரோட்டின் ஒரு பகுதி அகலமான நடைபாதையாகவும் சைக்கிள் ஓட்டும் பாதையாகவும் மாற்றப்பட்டுள்ளது என்றும் அவர் தனது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
கடந்த நவம்பர் மாதம் ஹவ்லாக் பெருவிரைவு நிலையம் திறக்கப்பட்டது. அப்போது அங்குக் கிட்டத்தட்ட 1.6 கி.மீ. தொலைவிற்கு இணைப்புப் பாதைப் பணிகள் நிறைவுபெற்றிருந்தன. அந்த இணைப்புப் பாதையுடன் தற்போது அமைக்கப்படும் இணைப்புப் பாதை சேர்க்கப்படும் எனப் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.