தியோங் பாரு சந்தை மற்றும் உணவு நிலையம் பழுதுபார்ப்பு, புதுப்பிப்புப் பணிகளுக்காக மூன்று மாதங்களுக்கு மூடப்படவிருக்கிறது.
ஏப்ரல் 14ஆம் தேதி முதல் ஜூலை 13ஆம் தேதி வரை அங்கு பணிகள் மேற்கொள்ளப்படும் என்று தேசியச் சுற்றுப்புற வாரியம் அங்குள்ள கடைக்காரர்களுக்கு ஜனவரி 17ஆம் தேதி அனுப்பிய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்தக் கட்டடத்தின் கீழ்த்தளத்தில் ஈரச் சந்தையும் மாடியில் உணவங்காடி நிலையமும் அமைந்துள்ளன.
2017ஆம் ஆண்டு அங்கு மிகப்பெரிய புதுப்பிப்புப் பணி மேற்கொள்ளப்பட்டது.
எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு இம்முறை மேற்கொள்ளப்படும் புதுப்பிப்புப் பணியின்போது புதிதாகச் சாயம் பூசப்படும் என்றும் மேசைகள், இருக்கைகள், தரைக் கற்கள், கார் நிறுத்துமிடத்தில் நீர் புகாத அம்சங்கள் போன்றவை புதிதாக மாற்றப்படும் என்றும் வாரியம் கூறியது.
கழிவறைகள், மின்விளக்குகள், காற்றோட்ட வசதி ஆகியவையும் மேம்படுத்தப்படும் என்று ஊடகக் கேள்விக்கு பிப்ரவரி 21ஆம் தேதி அளித்த பதிலில் வாரியப் பேச்சாளர் கூறினார்.
மூன்று மாத மூடல் குறித்தும் புதுப்பிப்புப் பணிகள் குறித்தும் உணவங்காடி நிலையப் பிரதிநிதிகளிடம் முன்கூட்டியே கலந்தாலோசிக்கப்பட்டதாக அவர் சொன்னார்.
மூடப்பட்டுள்ள காலகட்டத்திற்கு அங்குள்ள கடைக்காரர்கள் வாடகை செலுத்தத் தேவையில்லை. அவர்கள் மற்ற உணவங்காடி நிலையங்களிலோ சந்தைகளிலோ தற்காலிகமாகக் கடை நடத்த விரும்பினால் வாரியத்தை நாடலாம்.

